Advertisment

சென்னை சில்க்ஸ் தீ விபத்து சொல்லும் பாடம் : ராமதாஸ் அறிக்கை

தியாகராயர்நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை சில்க்ஸ் தீ விபத்து சொல்லும் பாடம் : ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

Advertisment

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகில் கூட தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. கட்டிடத்தின் தரைத்தளத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டு மற்ற மாடிகளுக்கும் பரவியது. இத்தகைய சூழலில் தரைத்தளத்தின் அருகில் தீயவிப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால், ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். கட்டிடம் மற்றும் அதிலிருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பையும் குறைத்திருக்க முடியும்.

ஒருபுறம் மேம்பாலம், மறுபுறம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கமாக பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 விழுக்காடு திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீயவிப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இந்த விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு விதிமீறல்களுக்குப் பிறகும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டிருந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாதவையாகிவிட்டன.

சென்னையில் ஏராளமான கட்டிடங்கள் இப்படித் தான் எந்த விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டிருக்கின்றன. தியாகராயர்நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிகக் கட்டிடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் சென்னை வாழத்தகுதியற்ற நகரம் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32,000 கட்டிடங்களை இடிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சென்னையிலுள்ள விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும். சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Dr Ramadoss Pmk T Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment