Advertisment

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளின் வாழ்க்கை குறிப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 6 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவி ஏற்கொண்டனர். அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
six new justice

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 6 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவி ஏற்கொண்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

புதிய நீதிபதிகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோரை நியமித்து ஜனாதிபதி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இதை தொடர்ந்து புதிய நீதிபதிகள் 6 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதியாக பதவி ஏற்றனர்.

புதிய நீதிபதிகளின் வாழ்க்கை குறிப்பு

நீதிபதி எஸ்.ராமதிலகம்:

1957ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி பிறந்தார். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர், பி.ஏ., பி.எல்., மற்றும் எல்.எல்.எம். என்ற முதுகலை சட்டப்படிப்பை முடித்து, வக்கீலாக பணியாற்றினார். பின்னர், 1991ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்த இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று, கடந்த 2000ம் ஆண்டு மாவட்ட முதன்மை நீதிபதி ஆனார். இவரது கணவரின் பெயர் கே.பாலசுப்பிரமணியன்.

நீதிபதி ஆர்.தாரணி :

தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த நீதிபதி ஆர்.தாரணி. 1961ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ராமஜெயம். தாயார் ரோஜா. தந்தை ராமஜெயம் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவர் நேர்மையான, கண்டிப்பான மற்றும் துடிப்பான அதிகாரி என்று பெயர் பெற்றவர். பல்வேறு மாவட்டங்களில் இவர் பணியாற்றியதால், நீதிபதி ஆர்.தாரணியும், பல ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1986 ஆம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். சிவகங்கையில் மூத்த வக்கீல் கணபதி சுப்பிரமணியனிடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர், 1991-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று, கடந்த 2009 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி பதவி உயர்வு பெற்றார். இவரது கணவர் பெயர் சிவசுப்பிரமணியன். இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களுக்கு ஜெயம் பிரதாப், அபிமன்யு என்ற இரு மகன்கள் உள்ளனர்.

நீதிபதி பி.ராஜமாணிக்கம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள குமாரபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், 1959ம் ஆண்டு பிறந்தார். ஆதனூரில் பள்ளிப்படிப்பையும், ஈரோடு சிக்கைய்யா நாயக்கர் கல்லூரில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1983ம் ஆண்டு வக்கீலாக பதவி செய்தார். சேலத்தில் மூத்த வக்கீல் பி.சொக்கலிங்கத்திடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர் 1991ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்தார். 2009ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, தற்போது உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார்.

நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி:

திருநெல்வேலியில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி பிறந்த நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி, மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1985-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, திருநெல்வேலி கோர்ட்டில் வக்கீல் மங்கா எஸ்.ஜவஹர்லால் என்பவரிடம் ஜூனியராக பணியாற்றினார். 1991-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்த இவர், 2010-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவரது தந்தையின் பெயர் தம்பூரான். கணவர் கே.ஞானவேல், திருச்சி தினமலர் நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜி.ராஜ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

நீதிபதி ஆர்.பொங்கியப்பன்:

ஈரோடு மாவட்டம், கொடுமுடி கிராமத்தில் 1960-ம் ஆண்டு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் கே.ராமசாமி- மலையம்மாள். கொடுமுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீசங்கரா வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பையும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமி கந்தர் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, 1986ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, ஈரோடு கோர்ட்டில் வக்கீல் எம்.நவநீதகிருஷ்ணனுடன் பணியாற்றினார். 1991-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்த இவர், 2010-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி ஆர்.ஹேமலதா:

மதுரையில் 1963-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிறந்த நீதிபதி ஆர்.ஹேமலதா, வக்கீல் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராஜகோபாலன், நீதிபதியாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இதனால், பல ஊர்களில் நீதிபதி ஹேமலதா பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மதுரை மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பையும், மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து, 1987-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். 1991-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்த இவர், 2010-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது கரூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஆர்.விஜயகுமார், யூகோ வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் வி.எஸ்.சரண்யாவுக்கு திருமணமாகி விட்டது.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment