Advertisment

தாயின் உடலை வீல் சேரில் இடுகாட்டிற்கு கொண்டு சென்று எரியூட்டிய மகன் : போலீசார் விசாரணை

நாற்காலியில் தனது தாயார் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக அவரின் மேல் ஒரு புடவையை போட்டு சுற்றினார்.

author-image
WebDesk
New Update
தாயின் உடலை வீல் சேரில் இடுகாட்டிற்கு கொண்டு சென்று எரியூட்டிய மகன் : போலீசார் விசாரணை

க. சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதான இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் மூதாட்டி இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி காரியங்களை செய்யவும் ஊர்காரர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று முடிவு செய்த முருகானந்தம் தனது தாய் இறந்தது குறித்து ஊரில் யாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

அதேபோல் இறந்தவர்களுக்கு செய்யப்படும் எந்த சடங்கையும் செய்யாத அவர், சக்கர நாற்காலியை எடுத்து வந்து தனது தாயாரைத் தூக்கி வைத்து, இடுப்புப்பகுதி, கைகள், கால்கள் ஆகியவற்றை சக்கர நாற்காலிகோடு சேர்த்து கட்டினார். நாற்காலியில் தனது தாயார் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக அவரின் மேல் ஒரு புடவையை போட்டு சுற்றினார்.

அதன்பின் சக்கர நாற்காலியை தனது இல்லத்தில் இருந்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனி ஒருவராக தள்ளிச் சென்றிருந்திருக்கிறார். மயானத்திற்கு சென்றவர் அங்கிருந்த ஊழியரிடம் தனது தாயை ஏரியூட்ட வேண்டும் என்று கேட்டபோது மேளம் இல்லை, உற்றார் உறவினர்கள் இல்லை, பாடையோ, வண்டியோ இல்லை, பிறகு எப்படி தாயை தூக்கி வந்தீர்கள் என்று அவர் கேட்டிருக்கிறார்.

publive-image

அப்போதுதான் தோல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று முருகானந்தம் கூறியிருக்கிறார். அதனையடுத்து முருகானந்தத்தின் உதவியுடன் மயானத்தில் இருந்த ஊழியர், ராஜேஸ்வரி உடலை எரியூட்டி இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயை உற்றார் உறவினர் இன்றி, உரிய இறுதிச் சடங்குகள் செய்யாமல் அவரது மகன் இடுகாட்டுக்கு கொண்டு சென்று எரியூட்டிருப்பது மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அருகே பாரதியார் நகரில் வசிக்கும் எலக்ட்ரீசியன் முருகானந்தம், (60) தனது தாய் ராஜேஸ்வரி, (84), என்பவரின் உடலை, 2.5 கி.மீ., தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தது குறித்தும் உடல் தகனம் செய்யப்பட்ட சுடுகாட்டை நிர்வகிக்கும் மேலாளர் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த ஸ்ரீதரன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். அவர் கூறியதாவது: “காலை 6 மணியளவில் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள டீக்கடை உரிமையாளரிடமிருந்து எனக்கு போன் கால் வந்தது. ஒரு நபர் சக்கர நாற்காலியில் துணியால் சுற்றப்பட்ட உடலைக் கொண்டு வந்து சுடுகாடு முன் காத்திருப்பதாக அவர் எனக்குத் தெரிவித்தார். நான் அந்த இடத்திற்கு உடனே சென்றேன். முருகானந்தம் என்னிடம், முடங்கிப்போயிருந்த அவரது தாயார் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அதிகாலை 4 மணியளவில் காலமானார் என்றும், அவரை தகனம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். நான் அதிர்ச்சியடைந்து ஏன் அவளை சக்கர நாற்காலியில் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டேன். அவரது தாயார் தோல் நோயால் அவதிப்பட்டதால், இறுதிச் சடங்கிற்கு யாரும் உதவ மாட்டார்கள் என்று உணர்ந்ததால் தனியாக சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தேன் என்று கூறினார்.” என்று ஸ்ரீதரன் கூறினார்.

மேலும், “நாங்கள் மருத்துவமனை ஆவணங்களை சரிபார்த்து, ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் உறுதிப்படுத்தினோம். முருகானந்தம் இறுதிச்சடங்குச் செலவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அரசாங்கமும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவுவதாக நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம்” என்று ஸ்ரீதரன் கூறினார்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் ராஜேஸ்வரியின் இறப்புச் சான்றிதழைப் பெற்று, மணப்பாறையில் உள்ள மயானத்தில் வியாழக்கிழமை உடல் தகனம் செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment