இவர் தமிழ்நாட்டின் ‘தண்ணீர் மனிதன்’: 9 குளங்களை வெட்டி தன் கிராமத்தை தண்ணீர் பஞ்சத்திலிருந்து மீட்ட பெண்

அந்த கிராமமே தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளது. அதற்கு காரணம் யார் என்றால், கிராமத்தில் உள்ள அனைவரும் சுமதியைத்தான் கை காட்டுகிறார்கள்.

சென்னைக்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் ஆதிகாத்தூர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தது. அந்த கிராமத்தில், கடந்த 10 வருடங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கு பார்த்தாலும் வறட்சி. கிராம மக்கள் விவசாயத்தை கைவிட்டு, வேறு ஊர்களுக்கு வேலை தேடி சென்றுகொண்டிருந்தனர். ஆனால், இப்போது அப்படியில்லை, அந்த கிராமமே தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளது. அதற்கு காரணம் யார் என்றால், கிராமத்தில் உள்ள அனைவரும் சுமதியைத்தான் கை காட்டுகிறார்கள்.

தினம் தினம் தண்ணீரை தேடுவதிலேயே அந்த கிராம மக்களுக்கு உடல் உழைப்பும், நேரமும் வீணானது. தன் கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல், வேறு இடங்களுக்கு செல்வதை பார்த்த சுமதி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என நினைத்தார். அப்போதுதான், சுமதியால் நம்முடைய கிராமத்துக்கு நல்ல மாற்றம் வரும் என நினைத்த கிராமத்தினர், 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட அவரை சம்மதிக்க வைத்தனர்.

அந்த தேர்தலில் வெற்றிபெற்ற சுமதி, தன் கிராமத்தின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்யும் வழிகளில் இறங்கினார். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதனால், இந்தியாவின் தண்ணீர் மனிதன் என அழைக்கப்படும், நீர் மேலாண்மை நிபுணரான ராஜேந்தர் சிங்கை சந்திக்க சில விவசாயிகளுடன் ராஜஸ்தான் சென்றார். சுமதிக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது. ஆனாலும், தன் மக்களின் கஷ்டத்தைப்போக்க பயணப்பட்டார்.

அங்கு, ராஜேந்தர் சிங்கிடம் நீர் மேலாண்மை குறித்து 10 நாட்கள் கற்றுக்கொண்டார். ஆனால், ராஜேந்தர் சிங் அந்த கிராமங்களில் பயன்படுத்திய தொழில்நுட்பம், ஆதிகாத்தூர் கிராமத்துக்கு சரிபட்டு வரவில்லை.

நம் முன்னோர்களின் வழியில் குளங்களையும், ஏரிகளையும் வெட்ட துவங்கினார், கிராம மக்களின் உதவியுடன். இப்போது, மொத்தமாக 9 குளங்களை வெட்டியிருக்கிறார். மெல்ல மெல்ல நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அந்த கிராமமே தண்ணீர் தேவையில் இப்போது தன்னிறைவை அடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2,000 மரங்களையும் அம்மக்கள் வளர்த்துள்ளனர். குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்கிறார்கள்.

தண்ணீரில் ஒரு கிராமமே தன்னிறைவ்வு அடைவதென்பது சாதாரணம் அல்ல. அதற்கு மாபெரும் பொறுமையும், அயராத உழைப்பும் தேவை. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்டு, கிராமத்தை மீட்ட சுமதியை வாழ்த்துவோம்.

இதையும் படியுங்கள்: 27 வருடங்களாக யார் உதவியுமின்றி குளம் வெட்டி கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தை போக்கிய தனி ஒருவன்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close