ஜிஎஸ்டி வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திரையரங்குகள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்த திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். தமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத திரையரங்க உரிமையாளர்கள், இப்போது திரையரங்க நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை 18% முதல் 28% வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

திரையரங்க நுழைவுச் சீட்டுகள் மீது, அவற்றின் கட்டணங்களைப் பொறுத்து 18% முதல் 28% வரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். பல மாநிலங்களில் அப்படித் தான் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட வரை அவர்களின் நிலைப்பாடு சரியானதே. ஆனால், தமிழக அரசுடன் நடந்த பேச்சுக்கள் வெற்றி பெறாத நிலையில், ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடிவடையவில்லை. கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக இரு தரப்பு பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். இந்தக் குழுக்களுக்கு இடையிலான பேச்சுக்கள் அடுத்த சில நாட்களில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது. அதன் முடிவுகள் தெரியும் வரை தற்போதுள்ள நிலையே நீடிப்பது தான் முறையாகும். மாறாக, பேச்சுக்கள் முடிவதற்கு முன்பாகவே நுழைவுச்சீட்டுக் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது புதுமையாக உள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கொடுமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் இரு வரிகளும் நடைமுறையில் இருந்தாலும் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை அம்மாநில அரசுகளே நிர்ணயித்து ஆணை பிறப்பித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அத்தகைய அரசாணை எதுவுமே பிறப்பிக்கப்படாத நிலையில், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்துடன் 28% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதமானது ஆகும். இந்த நடவடிக்கையின் காரணமாக திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து ரூ.154 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு ஒப்புக்கொள்ளாவிட்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று நீதி பெறுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக, ஒருபக்கம் அரசு அமைதியாக இருக்கும் நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவது ‘‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ அழுவதைப் போல் அழு’’ என்று அரசும், திரையரங்க உரிமையாளர்களும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகமாக தோன்றுகிறது. இதன்பின்னணியில் பெரும் பேரம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்போது ஜி.எஸ்.டி வரியும், கேளிக்கை வரியும் விதிக்கப்படுவதால் தங்களின் லாபம் குறைந்து விட்டதாக புலம்பும் திரையரங்க உரிமையாளர்கள், இதற்கு முன் கடந்த 2006&ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் வரை 90% படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், அந்த வரியையும் திரையரங்குகள் ரசிகர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளையடித்தன. முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியான போதெல்லாம் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட பல மடங்கு வசூலித்து பெருலாபம் பார்த்தன. இப்போதும் கூட திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் நொறுவைகள் மற்றும் குளிர் பானங்கள் பல மடங்கு அதிக விலை நிர்ணயித்து விற்கப்படுகின்றன. பல திரையரங்குகள் சொந்தமாக இணையதளம் வைத்துக் கொண்டு, நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்கின்றன. இந்த சேவைக்கு பத்து பைசா கூட செலவாகாது என்றாலும் முன்பதிவுக் கட்டணமாக ஒவ்வொரு நுழைவுச்சீட்டுக்கும் ரூ.30 முதல் ரூ.40 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறாக பலப்பல வழிகளில் ரசிகர்களின் பணத்தைப் பிடுங்கும் திரையரங்குகள் இப்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சகிக்க முடியாது.

திரையரங்குகளின் கொள்ளையை கண்டுகொள்ளாத அரசு, இப்போது கட்டணக் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகத் தான் பேரம் பேசப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. தமிழக அரசு உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்; திரையரங்குகளும் கட்டணத்தை குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, திரையரங்குகளில் நொறுவைகள் அதிகவிலைக்கு விற்கப்படுவதையும் அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கொள்ளைக்கு சட்டப்படியாக தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close