”தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியதில் தவறு இல்லை”: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

எரிபொருள் கட்டண உயர்வு, மற்ற பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருந்தால் தவறு இருந்திருக்காது என கூறினார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதில் தவறு இல்லை என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னை பொறுத்தவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதில் தவறு இல்லை”, என கூறினார்.

மேலும், எரிபொருள் கட்டண உயர்வு, மற்ற பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, நியாயமான முறையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருந்தால் அதில் தவறு இருந்திருக்காது என கூறினார்.

“இத்தனை ஆண்டுகள் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இப்போது உயர்த்துவது ஓட்டு வங்கி அரசியல். ஓட்டுகளுக்காக இத்தனை ஆண்டுகள் கட்டணத்தை உயர்த்தாமல் இப்போது உயர்த்தியிருக்கின்றனர். ஆனால், ஓட்டு வங்கி அரசியலை நடத்தாமல், சிறிது சிறிதாக கட்டணத்தை உயர்த்தியிருந்தால் மக்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நியாயமானதாக எடுத்துக் கொண்டிருப்பர். ஆனால், இப்போது மக்கள் மீது ஒட்டுமொத்தமாக சுமை திணிக்கப்பட்டுள்ளது”, என கூறினார்.

மேலும், அரசு பேருந்துகள் ஏன் இவ்வளவு மட்டமானதாக இருக்கின்றன? பராமரிப்பு செலவு உயர்ந்ததற்கான காரணம் என்ன என்பதை துறை ரீதியாக ஆராய்ந்து கட்டண உயர்வை பொதுமக்கள் தாங்கிக்கொள்ளும் அளவு உயர்த்தியிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது”, என தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close