ஹெச்.ராஜா முயற்சியால் கார்ட்டூனிஸ்ட் வர்மா விடுதலை: நடந்தது என்ன?

'பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டேன். வர்மா இன்று இரவு வீட்டில் தான் தூங்குவார். கவலை வேண்டாம் என்றார் H ராஜா'

Varma Cartoonist Released: திருமாவளவன் குறித்து கார்ட்டூன் வரைந்த வர்மா ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். அவர் வெளியான விதத்தை பாஜக நிர்வாகிகளே சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யாதது குறித்து விடுதலை சிறுத்தைகள் ஆதங்கத்தை பதிவு செய்கிறார்கள்.

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அண்மையில் தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி சர்ச்சை ஆனது அனைவரும் அறிந்ததே! தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த அவரது பேச்சுக்கு திருமாவளவன் மிக மென்மையாக கண்டனத்தை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் திருமாவளவன் மீது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் பாய்ந்தன.


கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் தனது முகநூல் பக்கத்தில், வேஷ்டி கட்டிய நபர் ஒருவரின் கால் ஷூவை, இன்னொருவர் ஏதோ செய்வதுபோல ஒரு கார்ட்டூனை வெளியிட்டார். இதற்கு சிறுத்தைகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுத்தனர். பேராசிரியர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சுப வீரபாண்டியன் ஆகியோரும் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸார் நேற்று (மே18) வர்மாவை கைது செய்தனர். ஆனால் நேற்று இரவே அவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார். இது தொடர்பான தகவல்களை பாஜக.வினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பாஜக நிர்வாகிகளில் ஒருவரான ஓமாம்புலியூர் ஜெயரானம் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

‘பட்டியலின மக்களை தயாநிதி மாறன் இழிவு செய்து பேசியதைக் கண்டிக்காமல் வருடிக் கொடுத்த திருமாவளவனை வர்மா என்பவர் கார்ட்டுன் வரைந்து கிண்டல் செய்தார். இதையடுத்து விசிக.வினர் வழக்கம்போல அவர் முகநூல் பக்கத்தில் அர்ச்சனை செய்தனர். திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்.

இன்று (18-ம் தேதி) மதியம் நம் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அழைத்து வர்மாவைக் கைது செய்யும் முயற்சி நடப்பதாகவும் அதையொட்டி விழுப்புரம் மாவட்ட SPயிடம் பேசியதாகவும் தெரிவித்தார். SP கைது செய்யும் முடிவில் இருப்பதையும் தெரிவித்தார். நானும் மதியம் SPயிடம் பேசினேன். விசிக, திமுக அழுத்தம் என்று சொன்னார்.

பின்னர் நம் அண்ணன் H ராஜாவை அழைத்து விஷயத்தை சொன்னேன். 10நிமிடத்தில் திரும்பி கூப்பிடுவதாக சொன்னார். பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டேன். வர்மா இன்று இரவு வீட்டில் தான் தூங்குவார். கவலை வேண்டாம் என்றார்.

நக்கீரன் கோபால் மீது எந்தெந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டு மாலை விடப்பட்டாரோ அதே பிரிவில் தான் வர்மாவும் கைது செய்யப்பட்டார். ஹிந்து ராம் எப்படி தலையிட்டாரோ அதே போல் தான் ராஜா அண்ணும் தலையிட்டு பேசியுள்ளார்.

மாலை 6மணியளவில் வர்மாவை விழுப்புரம் town காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கே நம் RSS, BJP, இந்து முன்னணி சகோதர்கள் நேரில் சென்றனர். இந்து முன்னணி மாவட்ட தலைவரை வர்மா வீட்டிற்கு இளங்கோ ஜி அனுப்பி நிலமையை தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஓசூர் அண்ணன் நரேந்திரனும், நண்பர் KT ராகவனும் இரவு ஏழு மணியளவில் தயாநிதி மாறன் கைதை வலியுறுத்தி DGPயை சந்திக்கச் செல்வதாக தகவல் கிடைத்தது. விஷயத்தை KTRடம் சொன்னேன். இருவரும் DGpயிடம் பேசியுள்ளனர். பின்னர் என்னை அழைத்த KTR, வர்மா ஜெயிலுக்கு போக மாட்டார் என்றார். இரவு சுமார் 11மணியளவில் ஓவியர் வர்மா தன் வீட்டிற்கு திரும்பி சென்றார்.

வர்மாவிடம் பேசிவிட்டு தர்ம போராளி ராஜா அண்ணனும் என்னை போனில் தொடர்பு கொண்டு வர்மா விடுவிக்கப் பட்டதை தெரிவித்தார். வர்மாவை சிறைக்கு அனுப்பும் முயற்சிக்கு முதல் சம்மட்டி அடி கொடுத்த ராஜா அண்ணனுக்கும், பாஜக மாநில பொது செயலாளர் அண்ணன் நரேந்திரன் மற்றும் பாஜக மாநில செயலாளர் KTR க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த விஷயத்தை ஆரம்பம் முதல் கையிலெடுத்து, தகவல் தெரிவித்து, விடாமல் போனில் பேசி follow up செய்த அஸ்வத்தாமனுக்கும் நன்றிகள் பல. வர்மா ஒன்றும் BJP, RSS காரர் இல்லை. இருப்பினும் அவர் பக்கம் நாம் நிற்க நம் சித்தாந்த எதிரிகளே காரணம்.

திருமாவிற்கு ஆதரவாக ஜவஹருல்லா அறிக்கை விட்டார். காரணம் தலித் பாசம் அல்ல. வர்மா போட்ட வேறொரு கார்டடுனுக்கு வஞ்சம் தீர்க்க தருணம் பார்த்தார் ஜவஹருல்லா. லயோலா கல்லூரியில் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் விமர்சித்து படம் வரைந்து கண்காட்சி நடத்திய கூட்டம் “இது எங்கள் கருத்து சுதந்திரம்” என்றது.
அப்போது இவர்கள் யாராவது கண்டித்தார்களா? மாறாக கருத்துரிமை என்றார்கள்.

அதே கருத்து சுதந்திரம் தின தந்தியில் கார்ட்டூன் போட்ட மதிக்கு கிடையாதா? பட்டியலின மக்களை திமுக தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. தன்னை பட்டிலின மக்களின் தலைவனாக சொல்லிக் கொள்ளும் திருமா திமுகவைக் கண்டிக்காமல் பூசி மெழுகுவதை விமர்சிக்க வர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா?,’ என பதிவு செய்திருக்கிறார் ஓமாம்புலியூர் ஜெயராமன்.

வர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகளும், இடதுசாரிகளும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ‘வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யாமல், வெறும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது ஏன்?’ என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close