திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: விஷால் தயார், காளிமுத்து மகனும் களம் இறங்குகிறார்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைக்கும் வாய்ப்பு இல்லை.

Thirupparankundram ByElection: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களம் இறங்குகிறார். டிடிவி தினகரன் கட்சி சார்பில் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிட இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், தமிழக அரசியலின் தற்போதைய நிலையை நாடிபிடித்து பார்க்கும் விதமாக வர இருக்கிறது. ஏற்கனவே 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயித்த அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேலு பதவியேற்கும் முன்பாகவே மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு 2016 நவம்பரில் இடைத்தேர்தல் நடந்தது.

அதிமுக வேட்பாளராக களம் இறங்கிய ஏ.கே.போஸ் அதில் வெற்றி பெற்றார். துரதிருஷ்டவசமாக இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பில் மரணம் அடைந்தார் ஏ.கே.போஸ். எனவே முறைப்படி திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாப் சாஹூ அறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அடுத்த 6 மாதங்களுக்குள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். அதற்குள் டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வருமா? எடப்பாடி ஆட்சி நீடிக்குமா? என பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலும்கூட நீதிமன்ற உத்தரவு காரணமாக வரும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைக்கும் வாய்ப்பு இல்லை. ஏற்கனவே ஆளும்கட்சிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் மத்திய வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் முக்கியப் பிரமுகர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

தமிழக பாஜக சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பவராக சொல்லப்படும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்மையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை சந்திக்காமல் அனுப்பியது, பாஜக.வுக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அதிமுக.வை விட்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமியை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியது ஆகியன அதிமுக தலைகளுக்கு உதறலை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் ஏ.கே.போஸின் மகனை அங்கு வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கும் முனைப்பில் அதிமுக இருக்கிறது. திமுக சார்பில் 2016 தேர்தலில் அங்கு போட்டியிட்டு தோற்ற டாக்டர் சரவணனே மீண்டும் வேட்பாளர் ஆவார் என தெரிகிறது.

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது. காளிமுத்து ஏற்கனவே இதே தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் வரை சென்று போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தனது அரசியலுக்காக பரிசோதனைக் களமாக உரசிப் பார்க்க தயாராகிறார். தென் மாவட்டங்களில் உள்ள விஷால் மன்ற நிர்வாகிகளுக்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு, திருப்பரங்குன்றம் தொகுதி நிலவரங்களை அவர்கள் அலசி வருகிறார்கள்.

Thirupparankundram ByElection: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வாக்குகள் பலம்:

2016 பொதுத்தேர்தல் முடிவு:

சீனிவேலு (அதிமுக)- 93,353 வாக்குகள்
மணிமாறன் (திமுக)- 70, 461 வாக்குகள்

2016 நவம்பர் இடைத்தேர்தல் முடிவு:
ஏ.கே.போஸ் (அதிமுக) – 1,13,032 வாக்குகள்
டாக்டர் சரவணன் (திமுக)- 70,362

2016 இடத்தேர்தலில் பாஜக 6,930 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1082 வாக்குகளும் வாங்கின.

இந்த முறை அதிமுக, திமுக, அமமுக, விஷால், பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியன களம் இறங்கும் என தெரிகிறது. எனினும் நான்கு முனைப் போட்டி உறுதி! திமுக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அந்தக் கட்சிக்கு கிடைக்குமானால் வெற்றி சுலபம்தான்! ஆனால் ஆர்.கே.நகர் அனுபவம், அப்படி உறுதியாக கூற முடியவில்லை.

ஆர்.கே.நகரைப் போலவே திருப்பரங்குன்றமும் அதிமுக அனுதாபிகள் மிகுந்த தொகுதி என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். எனவே இங்கு அனல் போட்டி உறுதி!

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close