மதுரையை தொடர்ந்து திருவாலங்காடு கோவிலில் தீ! தல விருட்சம் எரிந்தது

திருவாலங்காடு கோவில் தல விருட்சத்தில் தீப்பிடித்தது. மதுரையை தொடர்ந்து இங்கும் தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வு, ஆன்மீகவாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திருவாலங்காடு கோவில் தல விருட்சத்தில் தீப்பிடித்தது. மதுரையை தொடர்ந்து இங்கும் தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வு, ஆன்மீகவாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி. இங்கு வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபை ஆகும். காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையாரை தரிசிக்க முடியும்.

Thiruvalangadu, Fire Accident at Koil Tree

திருவாலங்காடு கோவில் பழைய படம்…

திருவாலங்காடு தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடவில்லை. மாறாக உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவம், பக்தர்களை பரவசப்படுத்தும். இந்தக் கோவிலின் தல விருட்சம் அரச மரம் ஆகும்.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சமான அரச மரத்தில் நேற்று (பிப்ரவரி 7) இரவு திடீரென தீப்பற்றியது. இதையறிந்த பக்தர்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

திருவாலங்காடு கோவிலுக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரத்தின சபைகளில் சிறப்பு வாய்ந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் தல விருட்சத்தில் திடீரென தீப்பற்றியது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் முக்கியத்துவம் வாய்ந்த திருவாலங்காடு ஆன்மீக தலத்திலும் தல விருட்சத்தில் தீப்பிடித்து எரிந்திருப்பது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு தீப் பற்றியது எப்படி? என்பது குறித்து அற நிலையத்துறையினரும், போலீஸாரும் விசாரித்து வருகிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close