11 வகையான உணவுடன் பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விவசாயி ஒருவர் தன் நாட்டு பசுமாட்டிற்கு வளைகாப்பு நிகழ்த்திய சம்பவம் விநோதமாக இருந்தது.

அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு மாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விவசாயி ஒருவர் தன் நாட்டு பசுமாட்டிற்கு வளைகாப்பு நிகழ்த்திய சம்பவம் விநோதமாக இருந்தது.

கோவை மாவட்டம் தீனம் பாலயத்தை சேர்ந்தவர் விவசாயி கிஷோர் குமார். இவர் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 9 மாதம் சினையாக உள்ள ஒரு பசுவுக்கு அவர் வளைகாப்பு நடத்தினார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்காக அவரது நண்பர்கள், உறவினர்கள், நாட்டுமாடு ஆர்வலர்கள் என சுமார் 50 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

11 வகையான உணவுகள் கொண்டு விருந்து அளிக்கப்பட்டது. சினையாக உள்ள மாட்டின் கொம்பில் வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அதன் முகம், திமில் பகுதிகளில் மஞ்சள், குங்குமம் தடவப்பட்டு, பெண்ணுக்கு எப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுமோ அதேபோல், தனது பசுவுக்கு விவசாயி கிஷோர் குமார் வளைகாப்பு நடத்தினார். மேலும், புரோகிதர் ஒருவர் மந்திரங்களும் ஓதினார்.

அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு மாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வளைகாப்பு நடத்தப்பட்டதாக, விவசாயி கிஷோர் குமார் கூறினார்.

சமீபத்தில் இதேபோன்று, ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் தான் வீட்டில் வளர்த்து வரும் பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close