‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு

ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பெறுவோம் என தூத்துக்குடி பங்குத் தந்தை கூறினார்.

ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பெறுவோம் என தூத்துக்குடி பங்குத் தந்தை கூறினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் இன்னும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தூத்துக்குடி பங்குத் தந்தை நார்த்தடே மற்றும் மீனவப் பிரதிநிதிகள் சிலர் இன்று (மே 26) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து பேசினர். அப்போது போலீஸ் கெடுபிடி உள்ளிட்ட சில புகார்களை கூறியதாக தெரிகிறது.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நார்த்தடே, ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு அரசாணை வெளியிட்டால் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை உறவினர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட, பலியான அனைவரும் தியாகம் செய்ததாக கருதிக் கொள்வோம்’ என்றார் அவர்.

 

×Close
×Close