தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : கடந்த 22ம் தேதி, 100 வது நாள் போராட்டத்தில் நடந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்ற போராட்டத்தின் 100 நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்த இந்தப் பேரணியில், திடீரென கலவரம் வெடித்தது. இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நடந்த இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் போராட்டத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கலவரத்தில் வாகனங்களுக்குத் தீ வைத்ததற்காகவும், போலீசார் மீது கல் வீசியதற்காகவும் ஏற்கனவே மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கலில் ரகுமான்,  முகமது யூசப், முகமது இஸ்ரப், தென்காசியைச் சேர்ந்த வேல்முருகன்,  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், தேனி மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கோட்டையன் ஆகியோரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close