தூத்துக்குடி ஸ்டெர்லைட் துயரம் : 2-வது நாளாக துப்பாக்கி சூடு, பலி 12 ஆனது, தலைவர்கள் முகாம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துயரம் தமிழ்நாட்டை உலுக்கியிருக்கிறது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இத்தனை உயிர்கள் மடிந்த கோரம், இதற்கு முன்பு நடந்தது இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துயரம் தமிழ்நாட்டை உலுக்கியிருக்கிறது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இத்தனை உயிர்கள் மடிந்த கோரம், இதற்கு முன்பு நடந்தது இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், இன்று நேற்றல்ல! 23 ஆண்டுகளாக நீடித்து வரும் நெடிய போராட்டம் அது! அதன் உச்சகட்டமாக கடந்த 100 நாட்களாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகிலுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் கோரமான தினமாக அது அமையும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கித் திரள, அவர்களை போலீஸ் நெட்டித் தள்ள, துப்பாக்கிச் சூட்டில் வரலாறு காணாத துயரம் நிகழ்ந்திருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துயரத்தின் LIVE UPDATES

மாலை 4.40 : தூத்துக்குடி அண்ணா நகரில் இன்று துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலியான நிலையில், மாலை 4 மணிக்கு அந்தப் பகுதியில் போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அண்ணா நகர் 6-வது தெருவில் ஒரு வீடும் தீப்பற்றி எரிகிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தபடி இருக்கிறது.

மாலை 4.10 : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிரேத பரிசோதனை நடந்ததும், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், அரசே பாதுகாத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பலியானவர்களின் உறவினர்களும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடும் வரை, உடல்களை பெற மாட்டோம் என கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

மாலை 3.50 : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், ‘முதல்வரோ, அமைச்சர்களோ நேரில் வந்து சுமூக சுழலை உருவாக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்றார்.

மாலை 3.40 : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னை, அயோத்திக் குப்பம், நொச்சிக் குப்பம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அடுத்தடுத்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மாலை 3.35 : தூத்துக்குடி நிலவரம் தொடர்பாக தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் என மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா கூறினார்.

மாலை 3.30 : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாலை 3.20 : துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறினர்.

மாலை 3.10 : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளை (மே 24) தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடத்த இருப்பதாக வணிகர்கள் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்தார்.

மாலை 3.05 : தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். காயமடைந்தவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

மாலை 3.00 : தூத்துக்குடியில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர் பெயர் காளியப்பன் என்றும், தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

பிற்பகல் 2.40 : தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று நடந்த கல் வீச்சைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக தெரிய வந்திருக்கிறது. இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆகியிருக்கிறது. இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

பிற்பகல் 2.15 : தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ரப்பர் குண்டுகள் மூலமாக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிற்பகல் 2.00 : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.

பகல் 1.30 : தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்தார். இன்று அவர் வெளியிட்ட வீடியோவில், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு, உளவுத்துறை உள்பட அரசின் மொத்த நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது. காவல் துறையின் வரம்பு மீறிய, சட்டத்திற்கு புறம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

பகல் 1.10 : தூத்துக்குடியில் பகல் 1 மணிக்கு போலீஸ் வாகனம் தீவைத்து கொளுத்தப்பட்டது. தூத்துக்குடி பிரையண்ட் நகர் 2-வது தெருவில் காவலர்களை தங்க வைக்க அழைத்து வந்த போலீஸ் பஸ் அது! மற்றொரு போலீஸ் பேருந்தை பாதி எரிந்த நிலையில் போலீஸார் மீட்டனர்.

பகல் 12.50 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து வரும் 25-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பகல் 12.45 : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உரிய விதிமுறைகளை பின்பற்றாதது ஏன்? என தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் வந்து சேர்ந்திருக்கிறது.

பகல் 12.25 : தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு தொடர்ந்து கூட்டம் திரண்டபடியே இருந்ததால், அங்கு பதற்றம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை முன்பு குவிந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். மருத்துவமனை முன்பு பெருமளவில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பகல் 12.00 : காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘இழந்த உயிர்களுக்கு ஒரே மாற்று ஆலையை மூடுவது தான் என உறவினர்கள் கூறினர். உடற்கூறு ஆய்வின்போது நடுநிலையான மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும்.’ என்றார்.

பகல் 11.50 : தூத்துக்குடி துப்பாக்கி சூடு-11 பேர் பலி தொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

பகல் 11.40 : கமல்ஹாசனை தொடர்ந்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அங்கு வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பகல் 11.35 : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களை கமல்ஹாசன் பார்த்தார். அப்போது துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள், ‘உங்கள் வருகையால் நாங்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறோம். நீங்கள் சென்று விடுங்கள்’ என ஆவேசப்பட்டனர்.

பகல் 11.30 : ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்திருக்கிறது. வீராங்கனை அமைப்பின் பொறுப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவருமான பேராசிரியை பாத்திமா பாபு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் விரிவாக்க முடிவை எதிர்த்தே கடந்த 100 நாட்களாக மக்கள் போராடி வருவதும், அதுதான் துப்பாக்கி சூடாக நீண்டு 11 பேரை பலி வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பகல் 11.25 : துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

காலை 11.20 : தூத்துக்குடி நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காலை 11.15 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவினர் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தபடி இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட பிறகே, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

காலை 11.10 : தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கிறது. இது தொடர்பான கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

காலை 11.05 : துப்பாக்கி சூட்டில் பலியான 11 பேர் உடல் பரிசோதனை இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பலியானவர்களின் உறவினர்கள் திரண்டிருக்கிறார்கள்.

அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்தபோதே நெல்லை டிஐஜி கபில்குமார் சரத்கரை, மக்கள் சிறை பிடித்தனர். அதேபோல காயமடைந்தவர்களை பார்க்க வந்த தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பினர். மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருக்கும் கூட்டத்தின் ஒரு பகுதியை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காலை 11.00 : தூத்துக்குடியில் போலீஸ் தடை உத்தரவு அமலில் இருப்பதால் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர்.

காலை 10.45 : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு முறையிட்டார். மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிக்கத் தயார் என விடுமுறை கால பெஞ்ச் நீதிபதிகள் கூறியதை தொடர்ந்து இன்று பிற்பகல் மனு தாக்கல் செய்ய இருக்கிறார் சங்கரசுப்பு.

காலை 10.40 : துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடை அடைப்பு நடக்கிறது.

காலை 10.30 : தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியை இன்று (மே 23) பார்வையிட சென்ற நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு சிறை வைத்தனர். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டிருக்கிறது.

காலை 10.15 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் ஆறுதல் கூறினார்.

காலை 10.00 : தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரப் பகுதிகளில் மே 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

காலை 9.50 : பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடியில் முகாமிட்டபடி இருக்கிறார்கள்.

காலை 9.45 : தூத்துக்குடி வன்முறையில் 17 அரசு பேருந்துகள் சேதமடைந்து உள்ளன. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து நெல்லை, மதுரை செல்லும் அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. திருச்செந்தூர், கோவில்பட்டி, நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

காலை 9.40 : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி உள்பட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

காலை 9.30 : ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு துயரத்திற்கு நேற்று 11 பேர் பலியானார்கள். மேலும் பலர் கொடுரமான காயங்களுடன் உயிருக்கு போராடுகிறார்கள். பலியான 11 பேர் பெயர் பட்டியல் வருமாறு: 1. ரஞ்சித்குமார் (வயது 22), தூத்துக்குடி. 2. கிளாஸ்டன் (40), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம். 3. கந்தையா (55), சிலோன் காலனி. 4. தமிழரசன் (45), ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர்.

5. சண்முகம் (25), தூத்துக்குடி மாசிலாமணிபுரம். 6.எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா (17), தூத்துக்குடி.  7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி. 8.மணிராஜ்(25), தூத்துக்குடி தாமோதர நகர். 9. கார்த்திக் (20), தூத்துக் குடி. 10, திரேஸ்புரத்தைச் சேர்ந்த வினிதா(37), 11. ஜெயராமன், உசிலம்பட்டி. துப்பாக்கி சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த இருப்பதாக மாநில அரசு கூறியிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close