Advertisment

கமல்ஹாசனை மிரட்டிய அமைச்சர்கள் ஊழலை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்! : ஜி.ராமகிருஷ்ணன்

கமல்ஹாசனை மிரட்டுவது, அமைச்சர்கள் தங்கள் ஊழலை ஒப்புக்கொண்டதற்கு அர்த்தம் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கமல்ஹாசனை மிரட்டிய அமைச்சர்கள் ஊழலை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்! : ஜி.ராமகிருஷ்ணன்

கமல்ஹாசனை மிரட்டுவது, அமைச்சர்கள் தங்கள் ஊழலை ஒப்புக்கொண்டதற்கு அர்த்தம் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள ஆரிக்கையில் கூறியிருப்பதாவது:

திரைக்கலைஞர் கமலஹாசன் இந்த ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பது பற்றி விமர்சனம் செய்திருந்தார். விமர்சனம் செய்வது அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தியதற்காக கமலஹாசனை தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் சிலர் வன்மத்தோடும் தரந்தாழ்ந்தும் விமர்சிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது.

தமிழகம் ஊழலில் சிக்கித்திளைக்கிறது என்பதற்கு ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையிலிருப்பது முக்கியமான அவக்கேடு என்பதை அதிமுகவினரும், அமைச்சர்களும் மறந்து விடக்கூடாது. ஆற்று மணல்கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, துணைவேந்தர் முதல் அலுவலக உதவியாளர் வரை நியமனங்களுக்கு லஞ்சம், ஒவ்வொரு வேலைக்கும் அரசின் கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்பது புரையோடிப் போனதாக விளங்குகிறது. தமிழக அரசின் ஊழலைப்பற்றி கமலஹாசனின் விமர்சனம் சரியாகச் சொல்வது என்றால் மிகவும் குறைந்தபட்சமானதாகும்.

விமர்சனத்திற்கு மாறாக உண்மைகள் மற்றும் விபரங்கள் இருப்பின் அதனடிப்படையில் மறுப்பதற்கான உரிமை ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் உண்டு. ஆனால் இந்த விமர்சனத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவர் கடந்த காலத்தில் முறையாக வரி கட்டி இருக்கிறாரா என்பதை விசாரிப்போம் என்று மூத்த அமைச்சர்கள் பேசுவதும் மிரட்டலாகும். மேலும், அந்த கருத்திற்குள்ளாகவே தாங்கள் ஊழல்வாதிகள் தான் என்கிற ஒப்புதலும் அடங்கியிருக்கிறது. தங்களை ஒருவர் விமர்சிக்காமலும், புகழ்ந்தும் பேசிக்கொண்டே இருந்தால், அவர்கள் வரி கட்டாமல் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம் என்பதும் அதற்குள் இருக்கிறது. இதுவும் ஒரு ஊழல் நடவடிக்கையே!

கமலஹாசனை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் கமலஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment