தமிழக அரசை சாடிய மூவர் அணி கூட்டணி: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேச்சு

என்னை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்து, எம்எல்ஏ-வாக்கியது ஜெயலலிதா தான். ஆனால், அதை நடைபெறச் செய்தது சசிகலா என கருணாஸ் தெரிவித்துள்ளார்

கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசையும், மத்திய பாஜக அரசையும் சாடிய, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்கள், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கோவையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்கள் தமீமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அவர்கள், ஜிஎஸ்டி, நீட், பசு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினர். மேலும், பாஜக அரசுக்கு ஒத்துழைப்பு தரும் தமிழக அரசையும் அவர்கள் கடுமையாக சாடினார். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தமிழகத்தில் தற்போது கல்லறை அரசியல் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றனர்.

ஜெயலலிதா மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது குறித்து எந்த விசாரணை நடைபெற்றாலும் எதிர்கொள்ளத் தயார். சிபிஐ விசாரணை வந்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம் என தமீமுன் அன்சாரி தெரிவித்தார். அதேபோல், ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட உணர்சிகரமான விஷயங்கள் தொடர்பாக அமைச்சர்கள் பொது இடங்களில் பேசும் போது, எச்சரிக்கையுடன் நிதானமாக பொறுப்புடன் பேச வேண்டும் என்றார்.

டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவளித்து வரும் கருணாஸ் பேசும்போது, என்னை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்து, எம்எல்ஏ-வாக்கியது ஜெயலலிதா தான். ஆனால், அதை நடைபெறச் செய்தது சசிகலா தான். சசிகலாவுக்கு நான் என்றைக்கும் விசுவாசமாக இருப்பேன். டிடிவி தினகரன் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும், நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார் ஆணித்தரமாக.

×Close
×Close