தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் 90வது ஆண்டு விழா மற்றும் ஆசிய அளவிலான ஜவுளித் துறை கருத்தரங்கம், கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ஜவுளித் துறையில் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
அப்போது பியூஷ் கோயல் பேசியதாவது;
கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டாக இருந்தாலும், ஜவுளி ஏற்றுமதி 500 பில்லியன் டாலரில் இருந்து 776 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஜவுளி துறையில் இரண்டு ஆண்டுகளில் 55 சதவீத வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இதற்காக ஜவுளித்துறை சார்ந்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன.
கொரோனா பரவல், ரஷ்யா உக்ரைன் போர் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்தது. அதில் தமிழகத்தில் உள்ள திருப்பூர் நகரின் ஏற்றுமதி பங்கு மட்டுமே 35 ஆயிரம் கோடியாக உள்ளது.
இந்திய ஜவுளித் துறையில் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பு செய்கிறது. இந்தியாவின் ஜவுளித்துறை பொருளாதாரத்தில் தமிழகம் மட்டுமே 30 சதவீதம் வகிக்கின்றது. அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில், இந்தியா தனது நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இந்தியாவின் ஜவுளி பொருளாதாரம் 35 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டும்.
உலகப் புகழ்பெற்ற தமிழ்ப்புலவர் திருவள்ளுவரும் ஒரு நெசவாளி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். தமிழக கலாச்சாரம் நமக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம். இந்த மாநிலம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மாநிலமாக உள்ளது. அனைத்து துறையையும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது.
உலக தலைவர்கள் பிரதமர் மோடியை பிரபலமான தலைவராக பார்க்கிறார்கள். பிரதமர் மோடி அந்த அங்கீகாரத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கானது என்று சொல்லியுள்ளார்.
நமது கடமையை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா இழந்த புகழை மீட்டெடுத்து, மிகப்பெரிய சக்தியாக மாற்ற வேண்டும். 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு ஆகும் எனக் கூறினார்.
இதை தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது;
இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 350 பில்லியன் டாலராக உயரும், ஏற்றுமதி மட்டும் 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும். பிரதமர் மோடி இந்தியாவை உலகின் முதன்மை நாடாக உருவாக்கி வருகிறார். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு உதவும் என பேசினார்.
கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மத்திய ஜவுளி மந்திரி பியூஷ் கோயல் அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறந்த மனிதர். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். மெகா ஜவுளி பூங்கா அவரது முயற்சியால் தமிழகத்துக்கு வர நடவடிக்கை மேற்கொண்டு வந்தார் என பேசினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.