திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற வடிவில் வாய்க்கால்களை வெட்டி, அதன் கரைகளில் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும் பகுதியில் 1 லட்சத்து 2020 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் பரவியுள்ளன. இங்குள்ள மரங்களை பராமரிக்கும் பணியை வனத்துறை மேற்கொண்டு வருவதுடன், அவ்வப்போது வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, 2023- 24-ம் நிதி ஆண்டில் துறைக்காடு என்ற இடத்தில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் 50ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட அலையாத்தி காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற வார்த்தை வடிவில், 555 மீட்டர் நீளத்துக்கு, 152மீட்டர் அகலத்தில் கரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் 65 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்களின் கரைகளில், கருங்கண்டல் வகை அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படத்தை வனத்துறை நேற்று வெளியிட்டுள்ளது, இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் எல்சிஎஸ்.ஸ்ரீகாந்த் கூறியது: ‘தமிழ் வாழ்க’ என்ற வடிவமைப்பை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன், திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் ந.சதீஷ், அவ்வப்போது நேரடியாகவும், தலைமை இடத்தில் இருந்தும் வழங்கிய ஆலோசனை பெற்று, கள ஆய்வு செய்து முத்துப்பேட்டை வனச்சரகர் ஜனனி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி இந்த அலையாத்தி காட்டுக்கு புதிய தோற்றம் தமிழ் சொற்களால் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த அலையாத்தி காட்டை பாதுகாக்க வேண்டும் என்கின்ற உணர்வை ஏற்படுத்த இந்த வடிவமைப்பு உதவிகரமாக இருக்கும் என அவர் கூறினார். இந்த புதிய முயற்சியை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“