கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் முகத்தில் குத்து : திருமண விழாவுக்கு சென்றபோது சம்பவம்

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் முகத்தில் குத்து விழுந்தது. திருமண விழாவுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. பந்தல் காண்டிராக்டர் கைதானார்.

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் முகத்தில் குத்து விழுந்தது. திருமண விழாவுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. பந்தல் காண்டிராக்டர் இது தொடர்பாக கைதானார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம். அதிமுக.வில் ஓபிஎஸ் ஆதரவாளர் இவர். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல் நபராக ஓபிஎஸ்.ஸை புகழ்ந்து, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என பேசியவர் இவர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். இவர் அங்கு திருமண மண்டபம் அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசீர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவரை தூக்க முயற்சிப்பதற்குள், திடீரென எம்.எல்.ஏ.வின் இரு கால்களையும் அந்த நபர் வாரி கீழே தள்ளினார். தடுமாறி தரையில் சாய்ந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முகத்தில் ஒரு குத்தும் விட்டார். இதனால் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நிலைகுலைந்தார்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வின் முகத்தில் வாலிபரின் கையில் இருந்த மோதிரம் குத்தி, உதட்டை கிழித்தது. இதனை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரை தாக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

காயமடைந்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை உடனடியாக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். அங்கிருந்த எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தனர். எம்.எல்.ஏ.வை தாக்கிய வாலிபரை போளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் போளூரை சேர்ந்த நடராஜன் மகன் வசந்தமணி (வயது 39)என்பது தெரியவந்தது. இவர் மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வின் கட்சிப் பணிகளுக்கு வசந்தமணி மேடை அலங்காரம் செய்துள்ளார்.

இதற்கு பணம் கொடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தமணி நேற்று இரவு எம்.எல்.ஏ. வீட்டுக்கு பணம் கேட்க சென்றார். அங்கு எம்.எல்.ஏ. இல்லாததால் ஆத்திரமடைந்து அங்கிருந்த கார் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தார். இதனையடுத்து திருமண நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ.வை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வசந்தமணியை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பொது இடத்தில் எம்.எல்.ஏ.வை தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

×Close
×Close