Advertisment

சட்டசபை ஹைலைட்ஸ்: தொழில் துறை பெயர் மாற்றம்… என்னுடைய டீம் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றும் - ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் என்னுடைய டீம் தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றும் என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Assembly Highlights, சட்டசபை ஹைலைட்ஸ், தொழில் துறை பெயர் மாற்றம், என்னுடைய டீம் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றும் ஸ்டாலின் உறுதி, TN Assembly, Industries department name changed, Thangam Thennarasu, CM MK Stalin swears Tamil nadu become first state

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னுடைய டீம் தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றும் என்று தெரிவித்தார்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (ஏப்ரல் 19) காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

தொழில்துறை பெயர் மாற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த விவாதத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், மாநில அளவில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்ந்து தொழில்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை’ வெளியிடப்படும்.

சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும்.

சென்னையில் 2-வது விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

வான்வெளி & பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும். கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் பணியை செய்தால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். அதற்கான கையேட்டினை மாநில திட்டக்குழு உருவாக்கி உள்ளது.” என்று அறிவித்தார்.

என்னுடைய டீம் தொழில்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தொழில் துறையில் முதலீடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “இங்கே அ.தி.மு.க.-வினுடைய சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரையாற்றுகிறபோது, நான் எனது வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்திலே சொன்னதாக ஒன்றை இங்கே பதிவு செய்திருக்கிறார். 10 வருடங்களாக நடக்காததை, 10 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படையில்தான் சொன்னேனே தவிர, வேறல்ல.

அவர் பேசுகின்றபோது, இன்னொன்றையும் குறிப்பிட்டார். அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே, அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது, முதலீடுகள் எப்படி வந்தன? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்படிக் கூட்டினோம்? அதேபோல, எத்தனைத் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் வேலைவாய்ப்புகள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது என்ற விவரங்களையெல்லாம் சொன்னார்.

அதேபோல, அதைத் தொடர்ந்து, இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர், அவர் ஆட்சிக் காலத்திலே கொண்டுவந்த முதலீடுகளைப் பற்றியும் குறிப்பிட்டார். அதேபோல, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி எவ்வளவு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் பெற்றிருக்கிறோம்; எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன; எத்தனைத் தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதையெல்லாம் பேசியிருக்கிறார். அதற்கெல்லாம், நம்முடைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடையிடையே எழுந்து அதற்கு பதில் சொல்லாமல், அவர் பேசி முடித்ததற்குப்பிறகு, நிறைவாக அவருடைய பதிலுரையிலே அவற்றிற்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்லவிருக்கிறார்.

இருந்தாலும், தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க, தொழில் துறை முன்னேற்றத்திற்காக நான் வெளிநாடு சென்று வந்த காரணத்தினால், அதிலே எனக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு சில விளக்கங்களை இந்த அவைக்கு நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலே எந்த மாற்றமும் கிடையாது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து, புதிய அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன.

ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 இலட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல; உறுப்பினர் பேசும்போது சொன்னார்; ‘MoU போட்டவுடனே, அடுத்த நிமிடமே, அடுத்த மாதமே தொழிற்சாலை வந்துவிடும்; வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. படிப்படியாகத்தான் அவையெல்லாம் வரும்’ என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அதில் உறுதி செய்யப்பட்டிருக்கிற முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.

அந்த வகையில், இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன; புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த அரசு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின், ‘வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும்’ அதனுடைய வளர்ச்சி, பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

அதனால்தான், இன்றைக்குக்கூட பிரபலமான தமிழ் பத்திரிகையான தினத்தந்தி பத்திரிகையின் தலையங்கத்தைப் பார்த்திருந்தால், நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில் இன்றைக்குக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; “தமிழ்நாட்டில் குவிகிறது அன்னிய நேரடி முதலீடுகள்” என்று இந்த அரசைப் பாராட்டி, அந்தப் பத்திரிகை தலையங்கமே எழுதியிருக்கிறது.

ஏற்கெனவே, ஆங்கில நாளேடான இந்து பத்திரிகை, ‘அன்னிய முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தமிழ்நாடு’ என்று பாராட்டி எழுதியிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமே, “2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான” காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 41.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரத்தையும் வெளியிட்டிருக்கிறது.

தேசிய அளவில் பார்த்தீர்களென்றால், 16 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்த அதே காலகட்டத்தில், தமிழ்நாடு இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, பெருமைப்படத்தக்க ஒரு செய்தியாகும். நாட்டின் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் தொழில் துறை வழிகாட்டி நிறுவனமாக இருக்கக்கூடிய Guidance Tamil Nadu ‘ஆசிய ஓசியானியா’ பகுதியில் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு முகமை என்ற சர்வதேச விருதினைப் பெற்றிருக்கிறது. அதற்காக அமெரிக்க தூதரகமே இந்த அரசைப் பாராட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டைத் தொழில் முதலீட்டாளர்களின் முக்கிய மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கக்கூடிய தொழில் துறைக்கு, குறிப்பாக, இந்தத் தொழில் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தங்கம் தென்னரசு அவர்களுக்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டை, வாழ்த்துக்களை இந்த அவையின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய தலைமையில் இயங்கக்கூடிய இந்தத் தொழில் துறை Team, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொழில் வளர்ச்சிக்கு சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர் அவர்களே சொன்னார். எனவே, சட்டம்-ஒழுங்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமல் இருப்பதற்கு தொழில் வளர்ச்சி நிச்சயமாகத் தேவைப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் தொழில் துறை வளர்ச்சிக்கு, நானும், இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமைச்சர் அவர்களும், அவருக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்தத் துறை அதிகாரிகளும் அதற்காகத் தொடரந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; இந்த அவையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், நீங்களும் அதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் முன்வர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு, சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறைக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அமைகிறேன்.” என்று தெரிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cm Mk Stalin Tamilnadu Assembly Thangam Thennarasu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment