Advertisment

சட்டப்பேரவை ஹைலைட்ஸ்: தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப்பணி… 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

“தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக் காட்டிய நாளாக அன்றைய தினம் (ஜனவரி 9) அமைந்திருந்ததே தவிர வேறொன்றும் இல்லை” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

author-image
WebDesk
New Update
tn assembly

TN Assembly

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் 5வது நாள் அமர்வில், தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணி, 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புகள் மற்றும் பதிலுரைகள் இடம்பெற்றன.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்டம் இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். முன்னதாக சட்டப்பேரவையில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2022-23-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில், மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி, மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி என்று தெரிவித்தார்.

2022-23-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில சட்டப் பிரிவுகளுக்கு இணங்க 2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் போக்குகள் குறித்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2022 வரையிலான 6 மாத காலத்திற்கான ஆய்வினை 2022-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 30-ம் நாளன்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகின்றது.

இந்திய அரசின் உதவி மானியங்கள் மற்றும் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு உட்பட 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி.

இது 2022-2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் வரவுகளில் 48.46 சதவீதம் ஆகும். இது 2021-2022-ம் ஆண்டில் அதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும். மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் குறித்த ஒப்பீட்டு விவரம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான முதல் 6 மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72,441 கோடியாகும். இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதம் ஆகும்.

இது முந்தைய ஆண்டின் அதாவது 2021-2022-ம் ஆண்டு அதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயோடு ஒப்பிடும்போது 36.92 சதவீதம் உயர்ந்துள்ளது.

2022-23 வரவு செலவுத் திட்ட மதிப்பீடான ரூ.15,537 கோடியில், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பெறப்பட்ட வருவாய் ரூ.5,994 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயை காட்டிலும் 50.83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 2022-23-ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 38.58 சதவீதமாக உள்ளது.

மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு 15-வது நிதிக்குழுவினர் பரிந்துரையின்படி, மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 2020-2021ஆம் ஆண்டு 4.189 சதவீதத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 4.079 சதவீதமாக சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உள்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணக்கிப்பட்ட உதவி மானியத்தில் 46.20 சதவீதமாகும். செப்டம்பர் 2022 வரை பெறப்பட்டுள்ள வருவாய் இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டு பெறப்பட்ட ரூ.17,717 கோடியைக் காட்டிலும் 3.67 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் தமிழ்நாடு அரசுப் பணி - சட்டத்திருத்தம்

2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆட்சேர்ப்பு முகாமைகள் மூலம் நடத்தப்படும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


இந்த சட்டத் திருத்தம் குறித்து பேசிய பா.ம.க, வி.சி.க, த.வா.க கட்சிகள் தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்க கூடிய நபர் எவரும் என குறிப்பிடுவதால் பிற மாநிலத்தவரும் தேர்வெழுத வாய்ப்பாக அமைவதாக கூறினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பிய வேல்முருகன், ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அடுத்து பேசிய பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, வெளிமாநிலத்தவரும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என்பதால், சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே கருத்தை வலியுறுத்திய வி.சி.க உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள் என கூறினார். இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாகவும், இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும் என கூறினார்.உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது.


செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டி - எம்.எல்.ஏ. கிரி கோரிக்கை

செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கலைஞர் பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை. செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12-ம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இதனால் செங்கம் தொகுதிக்கு கல்லூரி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளது. அங்கு 3 கல்லூரிகள் இருக்கின்றது. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. சபாநாயகர்கூட கல்லூரி ஒன்றை கேட்டுள்ளார். எங்கே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதோ அங்கு கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டுக் கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்ற நான் எனது சக்தியை மீறி செயல்படுவேன் - மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமத்துவ போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆள்ளாக்கி அழகுபார்த்த நவீன தமிழ்நாட்டி சிற்பி முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்த திராவிட மாடல் ஆட்சி.

தி.மு.க அரசு 20 மாதங்களை கடந்துள்ளது அதற்குள் இமாலய சாதனை செய்துள்ளோம். இலக்கினை அடைவதை நோக்கமாக கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது. அதுவே மக்களின் மனதை வென்றது. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுய ஆட்சி, ஆகிய தத்துவங்களில் அடிப்படையில் எழுப்பப்பட்ட பலம்வாய்ந்த இயக்கம் தி.மு.க.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அமையவேண்டுமென நாம் திட்டமிட்டோம். திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது சரித்திரபயணமாக ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 9-ம் தேதி கவர்னர் இந்த மன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான தொடக்க உரையை ஆற்றினார். அன்று நிகழ்ந்தவற்றை நான் மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்ந்தவும் நூற்றாண்டை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்றவும், நான் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும், என்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா… மயிலாட வான்கோழி தடை செய்வதோ? மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ? முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ? உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ? அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ? என்ற திராவிட இயக்க கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை நாம் என்று நினைவில் கொண்டு பெருமித நடைபோடுவோம்.

தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக்காட்டிய நாளாக அன்றைய தினம் (ஜனவரி 9) அமைந்திருந்ததே தவிர வேறொன்றும் இல்லை” என்று கூறினார்.

2023-ம் ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த 9-தேதி தொடங்கியது. ஆளுநர் வெளிநடப்பு சம்பவம் களேபரமானது. தொடர்ந்து இன்று 5-வது நாள் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது.

இன்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment