தமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES இன்று சபை கூடியதும் புதிய தலைமுறை நிகழ்ச்சி தொடர்பான வழக்குப் பதிவு விவகாரத்தை மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES இன்று சபை கூடியதும் புதிய தலைமுறை நிகழ்ச்சி தொடர்பான வழக்குப் பதிவு விவகாரத்தை மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. கடந்த மே 29-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர், 10-வது அலுவல் நாளாக இன்றும் (ஜூன் 11) தொடர்ந்தது.

காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் சபை கூடியது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், அதற்கு துறை அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை, வனத்துறை சட்டத்திருத்தம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு ஆகியன இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES இன்றைய நிகழ்ச்சி தொடர்பான லைவ் நிகழ்வுகள்:

4:00 PM : வெளிநடப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் அரசை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  அரசுக்கு யார் ஜால்ரா போடுகிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்’ என மு.க.ஸ்டாலின் கூறினார்.

3:30 PM :சேலம் பசுமைவழி சாலை போராட்டத்தை தூத்துக்குடி போராட்டத்துடன் ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.

3:20 PM : சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்பதால் திமுக வரவேற்கிறது. ஆனால் பசுமை வழிச்சாலை அமைப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கேட்க வேண்டும்’ என்றார்.

3:15 PM :பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘ஆன்லைன் மணல் விற்பனை உள்ளிட்டவை மூலம் மணல் அள்ளுவதில் உள்ள முறைகேடுகள் களையப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை என்பதால் மணல் அள்ளப்படுவது படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடங்கும்.’ என்றார்.

1:50 PM : மத்திய அரசிடம் இருந்து மாநில சாலைப் பணிகளை அதிகளவில் பெற்றுத் தந்தது அதிமுகவா? திமுகவா? என சட்டப்பேரவையில் விவாதம் காரசாரமாக நடந்தது.

1:45 PM: திமுக கோட்டை விட்ட திட்டங்களை மத்திய அரசிடம் அதிமுக அரசு போராடி பெற்றுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

1:30 PM : சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி. சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பதால் என்ன தவறு?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

1:15 PM : சட்டமன்றத்தில் காவிரி பிரச்னைக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றே தீருவோம்’ என குறிப்பிட்டார்.

11:40 AM: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதிலுரையில், காவல் துறை முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களை விவரித்தார். புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப் பெறுவது பற்றி விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் என்றும் முதல்வர் கூறினார்.

11:30 AM : காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ‘புதிய தலைமுறை மீதான வழக்கு தேவைதானா?; புதிய தலைமுறை மீதான வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்றார்.

11:15 AM : மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியாது. எனவே இதில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை குற்றம்சாட்டுவது சரியல்ல’ என்றார்.

11:00 AM: புதிய தலைமுறை மற்றும் அமீர் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தனியரசு எம்.எல்.ஏ வேண்டுகோள் வைத்தார்.

10:30 AM : கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயல் இது. புதிய தலைமுறை மீதான வழக்கை உடனே ரத்து செய்ய முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

10:00 AM : கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடந்த வட்ட மேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளர் சுரேஷ்குமார், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தனியரசு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close