பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதற்கான அதிமுகவின் அறிவிப்பு துரதிருஷ்டவசமானது என தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
மேலும், “இது குறித்து கட்சியின் மாநில மையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார். எனினும், “கூட்டணி குறித்து என்னால் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க முடியாது. மத்திய தலைமை தமிழகத்தின் வளர்ச்சியை கவனித்து வருகிறது, அவர்கள் அழைப்பார்கள்” என்றார்.
தற்போது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை (பிரதமர் நரேந்திர மோடியின் 73-ஆவது பிறந்தநாள் சேவை கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அதன்பின்னர், அந்தந்த குழுக்களின் கூட்டம் அக்டோபர் 2ஆம் தேதிக்குப் பிறகு கூட்டப்படும்” என்றார்.
இதற்கிடையில், அக்டோபர் 3ஆம் தேதி பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை, கமலாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
இதில், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“