சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். பாலசந்தர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததினால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது
இந்நிலையில், நேற்றிரவு தன்னுடைய பாதுகாப்பு காவலருடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது, காவலர் அருகே உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார்.
அச்சமயத்தில், அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் அவர்களை பிடிக்க ஓடி வருவதற்குள், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசந்தர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது, இந்த கொலை முன்விரோதம் காரணமாகவே நடந்துள்ளது. அரசியல் கொலையாக இருக்க வாய்ப்பில்லை. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சட்டஒழுங்கு சீராகவே உள்ளது. சமீபத்தில், 10 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது என்றார்.
இந்தச் சம்பவத்துக்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை. தி.மு.க அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமான்ய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல்.
மத்திய சென்னை மாவட்ட பட்டியலின அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழக பா.ஜ.க துணை நிற்கும்” என்று ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், பாலசந்தர் கொலை வழக்கில் 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர்களை தனிப்படை காவல் துறையினர். தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil