வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதி உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேம நல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேம நல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் கட்டபட்டு திறக்கப்பட்ட 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர், இந்தியாவிலேயே மிகச்சிறந்த கட்டிடமாக போற்றப்படுகிறது சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம். இங்கு பாரபட்சமின்றி நீதி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 419 புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

இந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசும் போது, நீதிபதிகள் குறித்த நேரத்தில் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். வழக்கறிஞர்கள், வழக்குகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரக்கூடாது என அறிவுறுத்தினார். கட்டிடத்திற்கு பின் பெரிய வரலாறு உள்ளது. இது கட்டிடம் மட்டும் அல்ல நீதி வழங்கும் இடமும் கூட மேலும் நாட்டிற்கு பல தலைவர்களை உயர் நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் அளிக்கபட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் எத்தனை கட்டிடங்கள் இருந்தாலும் உயர் நீதிமன்றம் தனித்துவம் பெற்று விளங்குகிறது என்றார்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “நீதித்துறையிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக நியாய மித்ரா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 158 வழக்கறிஞர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். இளம் வழக்கறிஞர்கள் இந்த திட்ட்த்தில் பதிவு செய்து ஏழைகளுக்கு சட்ட உதவியை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளின் எண்ணிக்கை 33,000. இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 11 நீதிபதிகள் பெயர் பட்டியல் பெறபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், பானுமதி, சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தையும், அருங்காட்சியகத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் குமார் மிஸ்ரா துவக்கி வைத்தார். கடந்த 1892-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற சாவியை மெட்ராஸ் மாகாண ஆளுனர், அப்போதைய தலைமை நீதிபதியிடம் வழங்கியது தொடர்பான நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

×Close
×Close