மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு: முதல்வர் பழனிசாமி விளக்கம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என திட்டவட்டம் தெரிவித்தார்.

முன்னதாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கர்நாடக அரசு எந்த புதிய அணையையும் கட்டலாம், ஆனால் அந்த புதிய அணையை சிறப்பு ஆணையம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் தான் விட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் கர்நாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்ற தொனியில் தமிழக அரசின் வாதம் அமைந்துள்ளதாக கூறி, தமிழக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார். “மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என வந்த செய்தி முற்றிலும் தவறானது. சமதள பரப்பாக உள்ள தமிழகத்தில் அணைகள் கட்டுவது சிறப்பாக இருக்காது என தமிழக அரசு வாதாடியது. மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தமிழக உரிமைகள் பாதிக்காதவாறு உச்ச நீதிமன்றத்தில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும்” என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.

மேலும் அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,”எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்போது பேச்சு மூலம் சரி செய்யப்பட்டு விரைவில் இரு அணிகளும் இணையும் என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close