மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் : டெல்லி புறப்பட்டார் தமிழக முதல்வர் !!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டுச்சென்றார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை ஓர் ஆண்டு காலம் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவைச் சிறப்பாக கொண்டாட மற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான தொகையாக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதல்-மந்திரிகள் என 114 பேர் இடம்பெற்று உள்ளனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே, பாஜக-வை சேர்ந்த அமித்ஷா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முலாயம் சிங், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுதாகர் ரெட்டி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர், இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

பின்னர் மாலை நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close