Advertisment

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM-Palaniswami rewards players

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த “கோல்ட் கோஸ்ட் 2018” காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 21-வது ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பல வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர். இந்த ஆண்டின் பதக்கப்பட்டியலில் இந்தியா 26 தங்கமும், 20 வெள்ளியும், 20 வெண்கலப்பதக்கமும் பெற்று 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்-வீராங்கனைகளுக்குத் தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனவே தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 லட்சமும் ரொக்கபரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.

கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ், சத்யன் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மேலும் 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.2.20 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்ற தமிழக வீரர் சத்யனுக்கு ரூ.50 லட்சம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற சரத்கமலுக்கு ரூ.50 லட்சம், ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா பலிக்கலுக்கு ரூ.60 லட்சம், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் பதக்கம் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தியா சார்பில் பதக்கம் வெல்வது பெருமை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment