காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் : மோடியிடம் முதல்வர் வேண்டுகோள்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவது போராட்டக் களமாக மாறி அமைதியற்ற மாநிலமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த மாதம் 3ம் தேதிக்குள் காவிரி விவகாரத்தில் செயல்திட்டம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராகத் தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இதற்கிடையே, மாமல்லபுரத்தில் நடைபெற்றும் வரும் ராணுவ தளவாடக் கண்காட்சிக்கு மோடி நேற்று தமிழகம் வந்தார். இவரின் வருகையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் உலக அளவில் “#GoBackModi” என்று ட்விட்டரில் வைரல் ஆனது. இருப்பினும் எதிர்ப்புகளை மீறி மோடி தமிழகம் வந்து சென்றார்.

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் வரவேற்று முழு நிகழ்வுகளிலும் அவருடன் இணைந்து பங்கேற்றார். மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்ட மோடியை முதல்வர் வழியனுப்பி வைத்தார். அப்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலை எடுத்துரைத்து, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் அளித்தார்.

அந்த மனுவில், “உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழக மக்களின் நலனுக்காகக் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவிரி தண்ணீரை நம்பியே டெல்டா விவசாயிகள் உள்ளனர். 1-6-2018 அன்று தொடங்கும் அடுத்த நீர்ப்பாசன பருவ காலத்தில் தங்கள் விவசாய பணிகளை தொடங்கும் வகையில் இந்தச் செயல்பாட்டு அமைப்பு மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுவிடும் என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close