Advertisment

ஸ்டாலின் பேச்சால் கடும் அதிருப்தி; அவநம்பிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்ட எச்சரிக்கை

முதலமைச்சரின் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
TN Government Employees Association Dissatisfaction, CM MK Stalin speech, ஸ்டாலின் பேச்சால் கடும் அதிருப்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அவநம்பிக்கை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் எச்சரிக்கை, CM MK Stalin, Tamilnadu

அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்த நிலையில், முதலமைச்சரின் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ. லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நேற்றைய (19.12.2021) தினம் நடைபெற்ற ஒரு அரசு ஊழியர் அமைப்பின் மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சரின் உரையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு, தமிழகமெங்கும் பரவலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது…

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான…

பெங்கல் போனஸ் ரூ 7000/-

Group A & B க்கு மீண்டும் கருணை தொகை

1.7.21 முதல் ரொக்கமாக 14 % அகவிலைப்படி…

ஒப்படைப்பு விடுப்பு பணப்பலனை மீண்டும் வழங்குதல்…

புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணி நீக்கம் இரத்து…

வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம்…

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம்…

மற்றும் சட்டபூர்வமான ஓய்வூதியம்…

ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்…

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது…

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக் காலமாக்குவது மற்றும் சாலைப் பணியாளர்களை unskiled என அறிவிப்பது…. மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம்…

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குதல்…

மேல்நிலை தொட்டி இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் தூய்மைக் காவலர்களின் கோரிக்கைகள்…

போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் முதலமைச்சர் அவர்களின் உரையில் இருக்கும்….

என்ற நம்பிக்கை ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்தது…

குறிப்பாக அரசு ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தலைமையேற்ற ஒரே காரணத்திற்காக முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நோக்கோடு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களது தற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்படும் என்பதை மட்டுமாவது முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்களிடையே பெருமளவில் இருந்தது…

ஆனால், மு.சுப்பிரமணியன் மீதான அரசுத் துறையின் குற்றச்சாட்டை நீதிமன்றமே தள்ளுபடி செய்த பின்பும், அவரது தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்வதால் எவ்வித நிதிச் செலவும் இல்லாத நிலையில் அதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல்,…

"அரசு கடும் நிதிச்சுமையில் இருக்கிறதென்றும், ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறதென்றும்…

அரசின் கஜானாவிலிருந்து எந்த அளவுக்கு கூடுதலான நிதி சம்பளமாக… ஊதியமாக… கூலியாக… பட்டுவாடா செய்யப்படுகிறதோ, அதே அளவு பொதுச் சமூகத்தில் பொருளாதார சுழற்ச்சியும், பொருளாதார மலர்ச்சி ஏற்படும் என்பதையும்,

அந்த வகையில் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவிடப்படும் தொகையானது…

தமிழகத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பினை பெருக்குவதற்கானதே என்ற உண்மைகளை மறந்தும்… மறைத்தும்…

முதலமைச்சர் அவர்கள் முந்தைய காலத்தில் போராட்டங்கள் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும்… தற்போது பட்டியலிட்டு ஆற்றிய உரை, அரசு ஊழியர்களிடையே இந்த அரசின் மீது கடும் அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் உருவாக்கி உள்ளது.

அது மட்டுமல்லாது, நிதி அமைச்சர் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், 2006-07-இல்‌ மொத்த வருவாய்‌ செலவினத்தில்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஊதியங்கள்‌ 27.95 சதவீதமும்‌ ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஓய்வுக்காலப்‌ பலன்கள்‌ 14.22 சதவிகிதமாக இருந்த நிலையில்‌, 2020-21-இல்‌ முறையே 24.92 சதவீதம்‌ மற்றும்‌ 10.50 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும்…

தமிழக அரசின்‌ நிதி நிலை அறிக்கையில்‌ நிதி வருவாயில்‌ ஒரு ரூபாயில்‌ 19 பைசா ஊதியத்திற்காகவும்‌, 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும்‌ செலவிடப்படுகிறது என்றும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், சம்பளங்கள், ஊதியங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் ஆகியவை செலவினத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதத்தை விட குறைவான வீதத்தில் அதிகரித்து வருகிறது.

ஊதிய குழு பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தியால் அரசு ஊழியர்கள் ஊதியமும் ஓய்வூதியமும் உயர்ந்துள்ள நிலையில் கூட செலவு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், "பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ 33,000 கோடி நிதியில் ரூ 31,000 கோடி அதாவது ஏறக்குறைய 94 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்திற்கே செலவு செய்யப்படுகிறதென உண்மைக்குப் புறம்பாக, அவதூறாக கூறியிருப்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த உண்மைகளையும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென, மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் உள்ளதாகவும்…

கடன் அடைக்கப்பட்ட பின்பு ஊழியர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும்… என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.

ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், முந்தைய ஆட்சியாளர்கள் அரசு கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள் என்று ஆட்சிக்கு வருபவர்கள் கூறும் நடைமுறையும் புதிதல்ல.

அரசின் கடன் தீரும் வரை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்க மறுக்கும் போக்கினை ஏற்க இயலாது.

அரசிற்கு உள்ள கடன்களை அடைப்பதற்கு மேலும் கூடுதலான வருவாய் ஈட்டுவதற்கான வழிவகைகளை கண்டறிவது தான் ஒரு மக்கள் நல அரசின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

அதற்கு மாறாக, கடனை காரணமாகக் காட்டி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை உதாசீனப்படுத்திடும்

இதே நிலை தொடரும் பட்சத்தில். “நிர்வாகத்தின் கால் செருப்பாக மாறிப் போகாமல், ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான படைக்கலனாய் அணிவகுத்து, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் தாங்கள் அமர வைத்த அரசை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடுவது தவிர்க்க இயலாததாகிவிடும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இத்தகைய சூழலில், ஏற்கனவே 05/12/2021 அன்று திருச்சியில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில், எதிர்வரும் 23/12/2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு… 28/01/2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு… 10/02/2022 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் ஆகிய போராட்டங்களை லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை திரட்டி அரசை நிர்பந்திக்கும் போராட்டமாக நடத்திட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அறிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Cm Mk Stalin Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment