Advertisment

இன்றுமுதல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: ஒரு லட்சம் பேர் மீது நடவடிக்கையில் இறங்கும் தமிழக அரசு!

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றுமுதல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: ஒரு லட்சம் பேர் மீது நடவடிக்கையில் இறங்கும் தமிழக அரசு!

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக கடந்த 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பங்கேற்ற 60 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதனால், நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இரண்டாக உடைந்தது.

இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மற்றொரு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறுகையில், "அமைச்சர்களுடனான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நவம்பர் இறுதிக்குள் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும், 7-வது ஊதியக்குழு தொடர்பாக செப்டம்பர் இறுதியிலும் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஈரோட்டில் கடந்த 6-ம் தேதி சந்தித்தபோதும் இதைத் தெரிவித்தார். இதை சரியாக புரிந்து கொள்ளாத சில அமைப்புகள், தனியாகப் பிரிந்துசென்று போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டம் நடத்துவது என்ற முடிவில் மாற்றம் இல்லை. தற்போது தள்ளிவைத்திருக்கிறோமே தவிர, கைவிடப்படவில்லை" என்றார்.

தற்போது, 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 9-ஆம் தேதி அறிவித்த படி, இன்று(திங்கள்) முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவர்களின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இருந்தாலும், தடையை மீறி போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை மதித்து அரசு ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் இன்று (திங்கள்) முதல் ஈடுபட இருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் மீது 17-பி பிரிவின் கீழ் சஸ்பெண்ட் நடவடிக்கை என தெரிகிறது.

Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment