அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் விவரம் மாயம்: கமல்ஹாசன் அறிக்கை எதிரொலி

ஊழல் புகார்கள் குறித்த நடிகர் கமல்ஹாசனின் வேண்டுகோள் எதிரொலியாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயமாகியுள்ளன.

ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்புங்கள் என்ற நடிகர் கமல்ஹாசனின் வேண்டுகோள் எதிரொலியாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயமாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பிலும் தமிழக அரசுக்கு எதிரான அவரது கருத்து எதிரொலித்தது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என கமல்ஹாசன் அப்போது குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, தமிழக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசை கட்டிக் கொண்டு கமலை விமர்சித்தும், மிரட்டியும் வருகின்றனர். கமல்ஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் எஸ்பி வேலுமணி மிரட்டல் விடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொறுப்பு கமல்ஹாசன்தான். அதில் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருக்கின்றன. இதற்காகவே கமலை கைது செய்ய வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டம் தெரிவித்தார். “அவன் ஒரு ஆளே இல்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தம்பிதுரை, ஜெயக்குமார் என அனைவரும் கமலை விமர்சித்து வருகின்றனர். ஆதராமிருந்தால் காட்டுங்கள், நீதிமன்றம் செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர்கள் கூறி வந்தனர். அதிமுக மட்டுமல்லாமல் பாஜக-வினரும் கமலை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், இதற்கெல்லாம் நடிகர் கமல்ஹாசன் அஞ்சுவதாக தெரியவில்லை. அதேபோல் தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ஊழல் தலை விரித்தாடுவதால், அவருக்கு ஆதரவலைகளும் பெருகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன. இதைக் கையில் எடுத்துக் கொண்ட அதிமுக-வினர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். “யாருடைய ஊதுகோலாகவோ கமல் செயல்படுகிறார். ஆதாரம் இருந்தால் வழக்கு போடட்டும். அதனை எதிர்கொள்ள தயார்” என அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.

இதனிடையே, “அமைச்சர் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் இனையதளத்தில் அல்லது உங்கள் வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள். இது டிஜிட்டல் யுகம் என்பதால் அதை பயன்படுத்தி அனுப்புங்கள். மரியாதை குறையாமல் இருக்கட்டும். குறைந்தபட்சம் சில கேள்விகள் வரும். அத்தனை கேள்வியலர்களையும் கைது செய்வீரோ?” என தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டார். அத்துடன் மட்டுமல்லாமல்,அமைச்சர்களை எலக்ட்ரானிக் முறை மூலம் தொடர்பு கொள்ள கூடிய முகவரியையும் //www.tn.gov.in/ministerslist அவர் பகிர்ந்திருந்தார்.

இது அமைச்சர்கள் மத்தியில் கட்டாயம் பீதியை கிளப்பியிருக்க கூடும். ஏனெனில், தமிழகத்தில் ஊழல் இல்லை என அவர்களால் கூட உறுதிபடக் கூற முடியாது. நாள்தோறும் ஊழல் குறித்த செய்திகளை நாம் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம். இந்நிலையில், கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக, அவர் வெளியிட்டிருந்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயமாகியுள்ளன. அரசு இணையதள பக்கத்தில் அவர்கள் வகிக்கும் துறை சம்பந்தப்பட்ட தகவல் மட்டுமே உள்ளது. துறை ரீதியாக அமைச்சர்களின் தனித்தனி விவர குறிப்புகளிலும் அவர்களின் முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி எண், சொந்த ஊர், சென்னை முகவரி போன்ற தொடர்பு விவரங்கள் இல்லை.

இதனை பராமரிக்கும் நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், “அமைச்சர்களின் விவரங்களை அவர்கள் கொடுத்தால் தான் பதிவேற்ற முடியும். அவை கிடைக்கவில்லை. அதனால், கிடைக்கபெற்ற தகவல்களை மட்டும் பதிவேற்றம் செய்து விட்டு, மற்ற இடங்களை காலியாக வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

ஆனால், அமைச்சர்கள் தொடர்பு விவரங்கள் நேற்று முன்தினம் கூட தமிழக அரசின் இணையதளத்தில் இடம் பெற்று இருந்தன. கமல்ஹாசனின் அறிவிப்புக்கு பிறகு இந்த விவரங்கள் மாயமாகிவிட்டன என தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

எனினும், தமிழக சட்டப்பேரவை இணையதளத்தில் //www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html எம்.எல்.ஏ.-க்கள், அமைச்சர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைகள் உள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி தங்களது ஊழல் புகார்களை பதிவு செய்யலாம்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close