மருத்துவ சேர்க்கை விவகாரம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்த நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு மத்திய அரசும் தமிழக அரசும் வேட்டு வைத்திருக்கின்றன.” என குறிப்பிட்டிருந்தார்.

நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதில் தமிழக அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருப்பதாகவும், மத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்க வேண்டிய அரசு, அதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பைக்கூட காட்ட அஞ்சுவதாகவும் தமிழக அரசை கடுமையாக சாடினார்.

”தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததன் விளைவாக, உரிமைக்குக் குரல் கொடுக்காமல் துரோகம் இழைத்துவிட்டது. தனது தவறை மறைப்பதற்காக, அடுத்தடுத்து பொய்யான வாக்குறுதிகளையும் தவறுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் ஓர் அரசாணை வெளியிட்டு, தமிழக மாணவர்களின் நலன்களைப் பாதுகாத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது. அந்த அரசாணை, சட்டவிரோதமானது என்று கூறி உயர் நீதிமன்றத்தால் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.”, என மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதகம் விளைவிப்பதாக அமைந்திருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

”மாநில அரசு, பொருத்தமான சட்ட வல்லுநர்களைக் கொண்டு உரிய வகையில் வாதாடியதா? பாடத்திட்டத்தில் சமத்துவம் இல்லாத நிலையில், மாணவர் சேர்க்கையில் மட்டும் எப்படி சமத்துவம் என்ற வாதம் சரியாகும்? என்ற நியாயமான கேள்விகளை நீதிமன்றத்தின் முன்னால் வைத்ததா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது.

சமூக நீதி உணர்வுக்கு மாறான, கிராமப்புற – அடித்தட்டு மாணவர்களைப் பாதிக்கக் கூடிய இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும்.

85 சதவீத எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ், இடங்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டாலும், நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே அவை நிரப்பப்படும். நீட் தேர்வுக்கென சிறப்புப் பயிற்சிப் பெறாத, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இதனால் பயன் இல்லை என்பதுதான் நிலை.”, எனவும் ஸ்டாலின் தமது அறிக்கையில் கூறினார்.

”மீண்டும் மீண்டும் பொய்யான நம்பிக்கைகளைத் தந்துகொண்டு இருக்கின்ற தமிழக அரசு, பரிதவித்துக் கொண்டிருக்கிற மாணவர்களின் இதயங்களில் வேல் பாய்ச்சி வருகிறது. எப்போதும் இல்லாத பெரும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் மாணவர்கள் நெஞ்சிலும் பெற்றோரிடத்திலும் ஏற்படுத்தியதற்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்தக் குளறுபடிகளுக்குக் காரணமான மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தி, போதிய அழுத்தம் தந்து, இனியும் காலங்கடத்தாமல், நீட் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழக மக்கள் இந்த மன்னிக்க முடியாத துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close