நக்கீரன் கைது : எடுபிடி அரசை பயன்படுத்தி கொல்லைப்புறம் வழியாக செயல்படுகிறது பாஜக என ஸ்டாலின் விமர்சனம்

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை தொடர்ந்து  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்...

நக்கீரன் இதழின் பத்திரிக்கையாசிரியர் நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை தொடர்ந்து  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை:

சமரசமற்ற உண்மையான சம்பவங்களுக்கு குரல் கொடுக்கும் பத்திரிக்கையாசிரியர் என்று பெயர் பெற்றவர் நக்கீரன் கோபால். மேலும் சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழக கர்நாடக காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கும் போதும் மிகவும் துணிச்சலாக சென்று அவரை பேட்டி கண்டவர் நக்கீரன் கோபால்.

சமீபத்தில் அவரின் இதழில் (செப்டம்பர் 26-28, 2018) கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் தள்ளியதாக கைதான நிர்மலா தேவி 4 முறை ஆளுநரை சந்தித்ததாக ஒரு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையையின் காரணமாகவே நக்கீரன் கோபால் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புனேவிற்கு செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார் நக்கீரன். அவரை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆளுநரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முழுமையான கட்டுரையைப் படிக்க

நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை : கண்டனங்களை பதிவு செய்யும் அரசியல் தலைவர்கள்

மூத்த பத்திரிக்கையாளாரின்  கைதை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்!” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைக் கட்சி

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ”பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து என கூறி, ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்”.

 நாம் தமிழர் கட்சி – சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் நக்கீரன் கோபால் மீது போடப்பட்டிருக்கும் தேசத் துரோக வழக்கு “கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப் பயங்கரவாதம்” என கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

வைகோ கைது

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை நேரில் சந்திக்க, சிந்தாதரிப் பேட்டை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்தார் மதிமுக பொதுச் செயலாளர். ஆனால் நக்கீரன் கோபாலை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் காவல் துறையினருக்கும் வைகோவிற்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் யாரை தேசத் துரோகிகள் என்று காவல் துறையினர் கைது செய்கிறார்களோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள் என்று கூறினார். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து வைகோவை கைது செய்தனர் காவல்துறையினர்.

கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

“தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close