Advertisment

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; ஸ்டாலின் பேச்சு பெரும் வேதனை: அரசு ஊழியர் சங்க தமிழ்ச்செல்வி பேட்டி

ஒத்த பைசா செலவில்லாமல் எம். சுப்பிரமணியம் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சொல்லிவிட்டு சென்றிருந்தால், நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். ஆனால், அவர் அதைக்கூட அறிவிக்காதது வருத்தமாக இருக்கிறது என தமிழ்ச்செல்வி கூறினார்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Government Employee Association, TNGEA President S Tamilselvi, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் சு தமிழ்ச்செல்வி, சு தமிழ்ச்செல்வி ஸ்பெஷல் பேட்டி, CM MK Stalin, Tamil nadu govt, TNGEA demand

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. தேர்தலில் எங்களுடன் அரசியல் கட்சிகள் கூட்டணி வைக்கிறதோ இல்லையோ ஆனால், உங்களுடன் (அரசு ஊழியர்களுடன்) தான் நிரந்தர கூட்டணி என்று அரசு ஊழியர்களை புகழ்ந்து பேசினார். மேலும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அரசின் கடன் பிரச்சனை குறைந்த பிறகு நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

Advertisment

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய மறுநாளே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் வெளியிட்ட கூட்டறிக்கையில் முதல்வர் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் இருவரும் வெளியிட்ட அறிக்கை அரசு ஊழியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

முதலமைச்சரின் உரை எப்படி ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது, ஏன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் போகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு. தமிழ்ச்செல்வியிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து பேசினோம். செல்போன் மூலம் சு. தமிழ்ச்செல்வி அளித்த நேர்காணல் இங்கே தரப்படுகிறது.

கேள்வி: அரசு ஊழியர் சங்கம் மாநாட்டில் முதல்வர் உரையாற்றிய மறுநாளே கடுமையாக விமர்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

சு. தமிழ்ச்செல்வி: தேர்தல் வாக்குறுதியில் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம், நிறைவேற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எந்த அரசாங்கம் வந்தாலும் கடனைத்தான் சொல்கிறார்கள். கடன் இருக்கிறது என்று தெரிந்துதானே வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருகிறார்கள். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணப் பலன்கள் மட்டும்தான் அவர்களுக்கு குறியாக இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதனால்தான் கஜானாவில் பணம் இல்லாத மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், தெரிந்தே எப்படி நீங்கள் தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ் ரத்து பண்ணிடுவோம். நாங்கள் வந்தால் காலி பணியிடத்தை நிரப்பிடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள். காஜானா காலியாகிவிடும் என்று தெரிந்து எப்படி வாக்குறுதி அளிக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இதுதான் எங்களுடைய வருத்தமான பதிவு.

கேள்வி: கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவிடப்படுகிறது என்று கூறப்பட்டது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அதே கருத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே கருத்தைத்தான் முன்பு சொல்லியிருக்கிறார் இல்லையா?

சு. தமிழ்ச்செல்வி: ஜெயலலிதா இருந்தபோது 2002ல் எங்களுடைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தை திருவல்லிக்கேணியில் திறந்துவைக்க நாங்கள் அவர்களைத்தான் அழைத்தோம். ஜெயலலிதா வந்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு, அரசுக்கு வரக்கூடிய நிதி வருவாயில் 98 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாகவே கொடுத்துவிடுகிறோம். மீதி இருக்கிற 2 சதவீத நிதியை வைத்துதான் நாங்கள் மக்கள் நலத்திட்டங்கள், ஆட்சியை நடத்திக்கொண்டு போகிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அப்போது, நாங்கள் அவர்களுக்கு பல உதாரணங்களைக் கொடுத்தோம். அவரிடம் உங்களால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்றெல்லாம் கேட்டோம். இன்றைக்கு அதையேதான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்கிறார். இது ரொம்ப வேதனையாக இருக்கிறது. 33,000 கோடி ரூபாய் இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கிறார்கள் என்றால் அதில் 31,000 கோடி ரூபாய் நாங்கள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளமாகவே கொடுத்துவிடுகிறோம். மீதி 2,000 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதில்தான் அவர்களுடைய சம்பளமும் இருக்கிறது. அவர்களுடைய அகவிலைப்படி உள்பட அவர்களுடைய ஒட்டுமொத்த சம்பளமும் இதிலேதானே இருக்கிறது.

முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அவர்களுடைய சம்பளம் எவ்வளவு உயர்த்தி இருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடட்டும். அவர்கள் எவ்வளவு படிகள் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை வெளியிடட்டும். எங்களுக்கு இன்றைக்கும் அகவிலைப்படியை நிறுத்தியிருக்கிறார்கள். ஈட்டிய விடுப்பை நிறுத்தியிருக்கிறார்கள்.

முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு இதை நிறுத்தினார்கள், அவர்கள் திருப்பிக் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்கள் வந்த உடனே கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு, 1.4.2022ல் இருந்து கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். திருப்பி, எங்களுடன் 3 மாதத்திற்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் 1.1.2022 முதல் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் வருவதற்கு முன்பு ஒரு வார்த்தை சொல்கிறார்கள். வந்த பிறகு ஒரு வார்த்தை சொல்கிறார்கள். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லோருமே நாங்கள் அஞ்சல் வாக்குகளில்தான் வெற்றி பெற்றோம் என்று அரசு ஊழியர்களை மனதாரப் பாராட்டினார்கள். அதற்கு பிறகு, எங்களுக்கு ஒதுக்கக் கூடிய பணத்தில்தான் இவர்களுக்கும் சம்பளம் போகிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

கேள்வி: பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இரண்டு கட்சிகளிடமும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாது என்று தெரிந்தே முன்வைத்து வருகிறீர்களா?

சு. தமிழ்ச்செல்வி: ஆமாம், உலக வங்கி முடியாது என்கிறார்கள். மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை 1.1.2004ல் இருந்து அறிமுகப்படுத்தியது. மாநில அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை 9 மாதங்கள் முன்கூட்டியே 1.4.2003ல் இருந்து அறிமுகப்படுத்தி தொடங்கிவிட்டார்கள். ஆனால், 2006ல் திமுக அரசாங்கம் வந்த பிறகுதான், அதற்கு வலுப்படுத்தும் விதமாக, சிபிஎஸ் பிடித்தம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி செய்தது திமுக அரசுதான். அதிமுக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடங்கியது. திமுக அரசு அதை வலுப்படுத்த கட்டாயப்படுத்தியது. சிபிஎஸ் பிடித்தம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் சம்பளம் பில் பாஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி கட்டாயப்படுத்தி சிபிஎஸ் பிடிக்க வைத்தது திமுக அரசாங்கம்தான்.

நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், மேற்கு வங்கம், திரிபுரா மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வசூல் பண்ணக்கூடிய 10 சதவீத பணத்தை ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆற்று ஆணையத்தில் (PFRDA) அந்த மாநிலங்கள் உறுப்பினராகி முதலீடாகப் போட்டுவிட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு இன்றைக்கு வரைக்கும் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆற்று ஆணையத்தில் உறுப்பினரே கிடையாது. அதில் உறுப்பினர் இல்லை என்றும் அரசாங்கம் ஒத்துக்கொண்டது.

கேள்வி: இந்த விஷயத்தில், ஜெயலலிதா, கருணாநிதி, இ,பி.எஸ், மு.க. ஸ்டாலின் ஒரே மாதிரிதானே செயல்பட்டு இருக்கிறார்கள் இல்லையா?

சு. தமிழ்ச்செல்வி: ஆமாம், இவர்கள் ஒரே மாதிரிதான் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறியிருக்கிறது. காட்சிகள் எதுவும் மாறவில்லை. 4 தேர்தல்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வந்தாகிவிட்டது. இன்றுவரை ரத்தாகவில்லை. 5 லட்சம் கோடி கடனை அடைத்த பிறகுதான், நாங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை சரி செய்கிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதையேதான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அரசு ஊழியர்களை ஒரு படி மேலே உயர்த்தி, அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் அகமாகவும் முகமாகவும் இருக்கக்கூடியவர்கள், அவர்களின் கோரிக்கைகளை நான் கனிவுடன் பரிசீலனை பண்ணுகிறேன் என்று சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என்றைக்கு தீர்கிறதோ அன்றைக்கு கொடுக்கிறேன் என்று கூறியது எங்களுக்கு வேதனையின் உச்சகட்டமாக இருக்கிறது.

மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% - 4% அகவிலைப்படி அறிவிக்கப்போகிறார்கள். ஆனால், எங்களுக்கு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படிக்கு என்ன பதில், 1.1.2022ல் இருந்து கொடுத்தாலும்கூட ரொக்கமாக நிலுவையுடன் ஏற்கெனவே கொடுக்க வேண்டிய அந்த அகவிலைப்படியுடன் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆதங்கம். அதற்குள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஓய்வு பெறும் வயது 58, 59, 60 என்று கூறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியபோது ஆதரித்தவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 59 ஆக உயர்த்தியபோதும் அவர்தான் ஆதரித்தார். எங்களுடைய நோக்கம் ஓய்வு பெறும் வயதை நீங்கள் 58 ஆகவோம் அல்லது 59 ஆகவோ அல்லது 60 ஆகவோ மாற்றுங்கள் அது அல்ல எங்கள் பிரச்சனை. ஆனால், இன்றைக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்லும்போது அந்த கடனை அடைத்த பிறகு கொடுப்போம் என்று சொல்கிறார். அதைவிட, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு கிராடுவிட்டியை கடன்பத்திரமாக வழங்க திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு அரசு ஊழியர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் இபோது பிரச்சனையாக இருக்கிறது. அது அரசு ஊழியர்களை இன்னும் கோபப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடன்பத்திரம் கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. எங்களுடைய கம்யூடேஷன் பணம், கிராடுவிட்டி பணம், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய எங்கள் பணம் அதை அரசு பத்திரமாக கொடுக்கிறோம் என்றால் அரசு ஊழியர்கள் அந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு சென்று எத்தனை வருஷம் உயிருடன் இருக்கப் போகிறார்கள். அவர்களுக்கு யார் சோறு போடுவார்கள். அதனால், இந்த திட்டம் அமல்படுத்துவதற்கு சாத்தியமே இல்லை. அது போல ஒரு சூழ்நிலை இல்லை. யாரும் பயப்பட வேண்டாம், பதற்றப்பட வேண்டாம் என்று இந்த விஷயத்துக்கு அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

5 லட்சம் கோடி ரூபாய் கடனைக் காட்டுகிறீர்கள் என்றால், செலவை மிச்சப்படுத்த 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளத்தை கட் செய்யுங்கள். நாங்கள் மக்கள் சேவைக்காக்தான் வந்திருக்கிறோம் என்று சொல்லி சம்பளம் வாங்காதீர்கள். தொகுதிப் படி வாங்காதீர்கள். டெலிபோன் பில் வாங்காதிர்கள், சிலிண்டர் பணம் வாங்காதீர்கள். அவர்கள் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று கணக்கிடுங்கள். நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தோம் நாங்களும் ஓட்டு போட்டு 10 ஆண்டுகளாக பார்த்துவிட்டோமே இந்த அரசாங்கம் வந்தாலாவது ஒரு திர்வு கிடைக்காதா என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த அரசாங்கத்துக்கு நாங்களும் வாங்களித்திருக்கிறோம். ஆனால், என்ன செய்வது எந்த அரசாங்கம் வந்தாலும் போராட்டம்தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்ட பிறகு, இவரும் (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) அதே மாதிரிதான் பேசுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எங்களுடைய மாநில மாநாட்டில், ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் ஆசிரியர்களின் தொழில்வரியை ரத்து செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், இன்று வரை நாங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை அரசாங்கத்தில் செய்கிற வேலைக்கு தொழில் வரி செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் அரசாங்க வேலை பார்க்கிறோம். தொழில் வரியை முறையாக செலுத்துவது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆண்டுக்கு ஒருமுறை முறையாக வருமானவரி செலுத்துபவர்களும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆனால், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு கொடுப்பது பெரிய சுமை ஓய்வூதியம் கொடுப்பது பெரிய சுமை என்று அரசாங்கம் சொன்னால் நாங்கள் யாரிடம் சென்று கேட்க முடியும்.

கேள்வி: தமிழ்நாடு அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர், கோரிக்கைளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும், போராட்டம் என்று அரசாங்கத்தை அச்சுறுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள்?

சு. தமிழ்ச்செல்வி: போராட்டம் என்பது அரசாங்கத்தை அச்சுறுத்தும் வார்த்தை கிடையாது. ஓய்வு பெற்று செல்பவர்கள் சிபிஎஸ் என எந்த பணமும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் யாருடைய கையையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், எனது பணம் வேண்டும் என்றால் நான் தெருவில் வந்து தானே கேட்டாக வேண்டும். 20 வருடமாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது கிடைக்கவில்லை என்கிறபோது நான் என்ன செய்ய முடியும்? வாழ்வாதாரம் என்று ஒன்று இருக்கு இல்லையா? எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாங்கள் ரோட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும். இதில் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான வார்த்தையே இல்லை. எங்களுடைய உரிமைகளைக் கேட்பது எப்படி அரசாங்கத்தை அச்சுறுத்துவதாக ஆகிவிடும்.

கேள்வி: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது?

சு. தமிழ்ச்செல்வி: அது மிகவும் தவறான ஒரு கருத்து. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாங்கள் எல்லோருமே ஒரு நாள் சம்பளத்தை கொடுத்திருக்கிறோம். எங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை முந்தைய அரசாங்கத்துக்கும் கொடுத்திருக்கிறோம். இப்போதைய அரசாங்கத்துக்கும் கொடுத்திருக்கிறோம். கடந்த அரசாங்கத்தின் முதல்வர் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரு நாள் சம்பளமாக 110 கோடி ரூபாயைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அரசாங்கம் வந்த பிறகும் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறோம். இப்படி 2 முறை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கொரோனா பொதுமுடக்கத்திலும் 50 சதவீதம் 100 சதவீதம் ஊழியர்கள் நாங்கள் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். அதே மாதிரி நாங்கள் எங்களுடைய அகவிலைப்படியை இழந்திருக்கிறோம். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்தலை இழந்திருக்கிறோம். கொரோனா தடுப்பு பணிகளுக்கு எவ்வளவு பணம் செல்வானது என்று அரசு ஒரு வெள்ளை அறிக்கையைக் கொடுக்கட்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பணத்தில் இருந்து எவ்வளவு பணம் எடுத்து செலவு செய்திருக்கிறார்கள் என்று ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடட்டும். நாங்கள் கேட்பது இதுதான்.

இதனால், ஒரு சுமையே கிடையாது, எங்களுக்கு கொடுக்கக்கூடிய பணத்தை அரசாங்கம் ஒரு சுமையாகக் கருதவே கூடாது. அரசின் போக்கு விதை நெல்லை வியாபாரமாக்குவது போன்றது என்ற வருத்தத்தை பதிவு செய்கிறேன்.

கேள்வி: அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஜெயலலிதா, கருணாநிதி, இ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள்?

சு. தமிழ்ச்செல்வி: அரசாங்கம் ஒரு முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறபோது, எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனையுடம் அரசு ஊழியர்களையும் அரசாங்கத்தையும் நினைக்கிறார்கள் என்கிறபோது அது வருத்தமாக இருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை எல்லாம் இறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் எந்த குற்றச்சாட்டும் சொல்ல வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த ஆண்டு 5வது மாதத்தில் இருந்துதானே இந்த அரசாங்கம் அமைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதையும் நாங்கள் குற்றமாக சொல்லவில்லை. அதனால்தானே, நாங்கள் அகவிலைப்படியை, ஈட்டிய விடுப்பை விட்டுக்கொடுத்தோம். எவ்வளவோ கடுமையான பணிகளை இன்று பொது சுகாதாரத் துறையிலும் மருத்துவத் துறையிலும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாங்கள் அவ்வளவு பணிகளை செய்து தமிழக அரசுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். எவ்வளவு பேர் உயிரிழந்த பிறகு, நாங்கள் அந்த பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். அந்த பணிகளை நாங்கள் இன்னும் செய்வோம். அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கக்கூடிய ஊதியத்தாலும் ஓய்வூதியத்தாலும், பணப்பலன்களாலும் தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது என்று கருத்துடன் இருக்கக்கூடிய முதல்வர்களின் எண்ணங்கள் மாற வேண்டும். அரசாங்கம்தான் ஒரு அச்சாணி. அரசு ஊழியர்கள்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பவர்கள் என்று எல்லா முதலமைச்சர்களும் சொல்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு.

கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் குறைந்தபட்சம் எந்த கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

சு. தமிழ்ச்செல்வி: 2019ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். சுப்பிரமணியம் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒரு பைசா செலவு இல்லாத இந்த கோரிக்கையையாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கலாம். நீதிமன்றம்கூட அவர் மீதான் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து விட்டது. அந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவரைப் பற்றி எந்த கோப்புகளும் இல்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் அன்றைக்கு இருந்த அதிமுக முதலமைச்சர், துணை முதலமைச்சரைப் பார்த்தோம். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என எல்லோரையும் பார்த்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

ஒத்த பைசா செலவில்லாமல் எம். சுப்பிரமணியம் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு சென்றிருந்தால், நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். பொருளாதார கோரிக்கைகளை எல்லாம் நாங்கள் எப்படியாவது வாங்கிக்கொள்வோம். 30.5.2019ல் அவர் பணி ஓய்வு பெற்ற பிறகும், 2 அரசாங்கமும் அவருடைய தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஜாக்டோ ஜியோ போராட்டம் நடக்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அண்ணா அறிவாலயம் சென்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதை சரி செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் கொடுத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், அந்த தேதியைக்கூட என்னால் சரியாக சொல்ல முடியும். நாங்கள் போய் பார்த்தபோது அவ்வளவு நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் எங்களுக்கு கொடுத்தார். குறைந்த பட்சம் இந்த ஒரு கோரிக்கையைக்கூட நிறைவேற்றாமல் போனது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Aiadmk Cm Mk Stalin Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment