Advertisment

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக செயல்பட்டு வந்த மதுக்கடைகளில் 50% கடைகள் மூடப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்கும் போது மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயும் 50% அளவுக்கு குறைந்திருக்க வேண்டும்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
dr. ramadoss

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

Advertisment

தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற ஆணைப்படி 3321 மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகும், மது வணிகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவதற்கு பதிலாக விகிதாச்சார அடிப்படையில் அதிகரித்திருக்கிறது. வருவாயை இழக்க மனமில்லாத அரசு மதுவை சட்டவிரோதமாக விற்கிறது என்ற பா.ம.க. புகாரை இது உறுதி செய்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் பயனாக தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி அமைந்துள்ள 90 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர 5700 கடைகள் செயல்பட்டு வந்தன. அவற்றில் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி 3321 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் சுமார் 2379 மதுக்கடைகள் மட்டும் தான் இப்போது செயல்பட வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி பல்வேறு இடங்களில் 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக வைத்துக் கொண்டால் கூட 2879 மதுக்கடைகள் மட்டுமே இப்போது திறந்திருக்க வேண்டும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.

இத்தகைய சூழலில் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ள மூத்த அதிகாரி ஒருவர்,‘‘ டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.29,000 கோடி வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது அதிக எண்ணிக்கையிலான மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதால் நிறுவனத்தின் வருவாய் 15% வரை குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் டாஸ்மாக் வருவாய் ரூ.730 கோடி குறைந்துள்ளது. மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன. இதேநிலை நீடித்தால் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.4350 கோடி குறைந்து விடும். அரசின் வருவாயில் 30% மதுக்கடைகள் மூலமாக கிடைப்பதால் இது தமிழகத்தின் நிதிநிலையை பாதிக்கும்’’ என்று தெரிவித்தார்.

டாஸ்மாக் அதிகாரியின் இந்த புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக செயல்பட்டு வந்த மதுக்கடைகளில் 50% கடைகள் மூடப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்கும் போது மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயும் 50% அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். மாறாக, 50% மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், 15% மட்டுமே வருமானம் குறைந்திருப்பதாக கூறப்படுவது ஏற்கத்தக்கதாக இல்லை. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகளைத் தாண்டி சட்டவிரோதமாக பல இடங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது என்பதையே இது உறுதி செய்கிறது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் நிறுவனமே, அதன் பணியாளர்களைக் கொண்டு கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்கிறது.அதேநிலை இன்னும் தொடர்கிறது என்பதையே டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானம் குறித்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன. ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மது வணிகம் நடைபெற்ற பல மதுக்கடைகளில் இப்போது ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மதுவணிகம் நடைபெறுகிறது. சில்லறை வணிகத்தில் இந்த அளவுக்கு மது விற்பனையாக வாய்ப்பே இல்லை. மாறாக பெட்டி பெட்டியாக மதுவை தனியாருக்கு விற்று அதை அவர்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் மட்டுமே இந்த அளவுக்கு மது வணிகம் செய்ய முடியும். இந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஓர் அரசாங்கம் அதன் செலவுகளுக்கு மது வணிகத்தை நம்பியிருப்பதை விட அசிங்கம் வேறு எதுவுமில்லை. எனவே சட்டவிரோத மது விற்பனையை அரசு தடுத்து நிறுத்துவதுடன், அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment