திருச்சியில் டாட்டூ வரையும் கடை நடத்திய ஹரிஹரன் மருத்துவ விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக நாக்கை பிளவுபடுத்தி, டாட்டூ வரைந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருச்சி மாநகர காவல்துறை ஹரிஹரனையும், அவரது நண்பர் ஜெயராமனையும் கைது செய்து விசாரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை டாட்டூ சென்டர்களை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக டாட்டூ சென்டர்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளிலும், பிரபல வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவ விதிமுறைக்கு அப்பால் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இளைஞர்களை எச்சரித்துள்ளார்.
நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைவது மருத்துவ விதிமீறல் ஆகும். மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராமில் தற்போது இதுபோன்ற வீடியோ போடுவது அதிகரித்து வருகிறது.
முழுக்க முழுக்க உடல்நலத்தை பாதிக்கக்கூடியது. இந்த மோசடியில் இளைஞர்கள் யாரும் விழ வேண்டாம் . இதில் ஈடுபட்ட, ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“