Advertisment

அக்டோபர் மாத சம்பளம் இல்லை… மன உளைச்சலில் பழங்குடியினர் நல பள்ளியின் 150 ஆசிரியர்கள்; கவனம் செலுத்துமா அரசு?

பழங்குடியினர் நலப் பள்ளியில் பணிபுரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பழங்குடியினர் நலத் துறை அக்டோபர் மாதம் முதல் ஊதியம் அளிக்காததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

author-image
Balaji E
New Update
Tribal welfare department, Tribal welfare Schools teachers salary issues, Tribal Welfare Schools teachers and non teaching staff

பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள். பழங்குடியினர் நலத் துறை அக்டோபர் மாதம் முதல் பழங்குடியினர் நலப் பள்ளியில் பணிபுரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய அளிக்காததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

Advertisment

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகள், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி நீலகிரி, விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், தேனி, தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணி புரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் பழங்குடியினர் நலத்துறை ஊதியம் வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். இது குறித்து பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என ஒருங்கே செயல்பட்டு வந்த இயக்குநரகம் நிர்வாக வசதிக்காக 2019-ம் ஆண்டு முதல் தனித் தனியே பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு நிதித்துறையின் மூலமாக நிதி பெற்று ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக, பழங்குடியினர் நலத்துறை ஊதிய நீட்டிப்பு தொடராணை பிறப்பிக்கும்.

அதன்படி, அரசாணை எண் 82-ன் படி பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயக்கும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 150 ஊழியர்களுக்கு 30.06.2022 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலத் துறையின் இயக்குநர் விரைவு கொடுப்பாணையில் ஜூலை - 2022, ஆகஸ்ட் - 2022 மற்றும் செப்டம்பர் - 2022 ஆகிய மாதங்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலத் துறை ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு தொடராணை பெறப்படாததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அக்டோபர் - 2022 மாத ஊதியமின்றி மிகுந்த மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால், பழங்குடியினர் நலத்துறை ஆசியர் மற்றும் பணியாளர்கள் அன்றாட அத்தியாவசிய செலவுகளைக்கூட சமாளிக்க முடியாமல், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதோடு, அன்றாடம் அர்ப்பணிப்பு மனதுடன் கற்றல், கற்பித்தல் பணியை மேற்கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் உளவியல் ரீதியாக தாக்கம் ஏற்படுவதாலும் மனச்சோர்வு அடைந்துள்ளனர்.

ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடம் இதுபோன்ற மனத்தாக்கம் இவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் விரைவாக ஊதியம் பெறுவதற்கு பழங்குடியினர் நலத்துறையும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அந்தந்த மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற்றால் மட்டுமே உளவியல் ரீதியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். அதனால், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளின் நலன் கருதி, சிறப்பு நிகழ்வாகக் கொண்டு மேற்படி பழங்குடியினர் நல பள்ளிகளில் பணியாற்றும் 150 ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு தொடராணை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதுமட்டுமில்லாமல், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அதே போல, பணி மாறுதலிலும் பிரச்னைகள் இருக்கிறது. பணி மாறுதல் கிடைத்தவர்கள் இன்னும் அந்த பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

பதவி உயர்வு வழங்குவதில், பணி மூப்பு வரிசையை சரியாக செய்யப்படாததால், பல ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பதவி உயர்வு கிடைத்த ஆசிரியர்கள் அந்த இடத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பல பள்ளிகள் ஓராசிரியரை மட்டுமே கொண்ட பள்ளிகளாக உள்ளன. ஆசிரியர் இல்லாத பள்ளிகளும் இருக்கிறது. இதையெல்லாம், அரசு சரி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் பழங்குடியினர் நலத்துறையில் உள்ள குறைகளை புலம்பி குமுறுகிறார்கள்.

பழங்குடி நலப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 150 பேருக்கு ஊதியம் அளிக்கப்படாதது குறித்து, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை அவர்களை இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து தொடர்புகொண்டு பேசினோம். அதற்கு அவர், அனைவருக்கும் சம்பளம் போட்டாகி விட்டது. இருந்தாலும், நான் சரிபார்த்துவிட்டு அழைக்கிறேன் என்று கூறினார்.

ஆனால், இப்போது வரை (நவம்பர் 13, 2022 மாலை 5.00 மணி வரை) அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இன்னும் ஊதியம் கிடைக்காமல் மன உளைச்சலில் இருக்கும் ஆசிரியர்களின் வேதனையைப் புரிந்துகொண்டு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment