Advertisment

திருச்சியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்க்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் 55,169 வாக்காளர்கள் நீக்கம்; 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்க ஆட்சியர் பிரதீப்குமார் அழைப்பு

author-image
WebDesk
New Update
திருச்சியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்க்க அழைப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மா.பிரதீப்குமார் வெளியிட்டார்.

Advertisment

பின்னர் அவர் தெரிவித்ததாவது:- திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 975 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 85 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 289 பேர் என மொத்தம் 23 லட்சத்து 1,278 வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: திருச்சியை மிரட்டும் மெட்ராஸ்‌ – ’ஐ’; அறிகுறிகள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2,544 வாக்குச்சாவடிகள் உள்ளன. 75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7-வது இடத்தில் உள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2023-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைப்பெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இன்று 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், கிராம / நகர்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டவுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

publive-image

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் தேதி (சனி), 13 ஆம் தேதி (ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் மேலும் 26.11.2022 அன்றும் முகாம்கள் நடைபெறும் இடங்களில் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்திய வாக்காளர்கள் படிவம் 6A-இல் நேரடியாக/இணைய வழியில் வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

26 ஆம் தேதி(சனி) மற்றும் 27 ஆம் தேதி (ஞாயிறு) ஆகிய  2 தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது. 31.12. 2004 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் உரிய ஆவணங்களுடன் சமர்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-யும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விண்ணப்பங்கள் 9-ம் தேதி முதல் டிசம்பர் 8- ம் தேதிவரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் எனவும், மேலும் நாளது தேதிவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காத வாக்காளர்கள் மேற்படி சிறப்பு முகாம் நடைபெறும் நாள் அன்று சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலரிடம் படிவம்-6 பி-யில் விண்ணப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம்.

மேலும், நவ. 12,13. ஆகிய 2 தேதிகளிலும் மற்றும் 26, 27 ஆகிய 2 தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழி தகவல் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, 2023-ம் ஆண்டிற்குரிய சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின்போது தகுதியான வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட நகர செயலாளர் மதிவாணன், வக்கீல் தினகரன், அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) அணி சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன், அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) அணி பகுதி செயலாளர்கள் சுதாகர், தாயார் சீனிவாசன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவா, வெற்றி செல்வன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment