திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது மகள் ஸ்டெஃபி ஜாக்லின் (15), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஸ்டெஃபி, அமேசானில் விற்பனை செய்யப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை ஆர்டர் செய்து வாங்கி, அதனை இரவில் சமைத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
காலையில் பெற்றோர் எழுப்ப முயன்ற போது சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அரியமங்கலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்ட நூடுல்ஸால்தான் சிறுமி உயிரிழந்ததாக தகவல்கள் பரவ, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமேசானில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு வேதனை அளிக்கின்றது.
சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்படும், என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“