திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இப்போது கார்கள் மற்றும் டூவிலர் பிரீமியம் பார்க்கிங் என்ற பெயரில், டூவீலர் பார்க்கிங் ஒப்பந்ததாரர்கள் வாகன கட்டணக் கொள்ளையடிப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக பயணிகள் புலம்புகின்றனர்.
Advertisment
வாகன நிறுத்துமிடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரயில் பயணி ஹரீஷ்
இதுகுறித்து ரயில் பயணி ஹரீஷ் நம்மிடம் தெரிவிக்கையில்; திருச்சி கோட்டத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், தற்போதுள்ள வசதியின் பெயரின் முன்னொட்டுடன் ‘பிரீமியம்’ ஆனது. திருத்தப்பட்ட பார்க்கிங் கட்டணங்கள் குறிப்பிடப்பட்ட சிறிய பலகையைத் தவிர பிரதான நுழைவாயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த வசதியை தொடங்குவதற்கு முன்பே கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமலுக்கு வந்த திருத்தத்தின்படி, 12 மணி நேரம் வரை வாகனம் நிறுத்துவதற்கு ரூ.10 (முன்பு ரூ.5), 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ரூ.20 (முன்பு ரூ.10) மற்றும் ரூ.30. காரில் நான்கு மணி நேரத்திற்கு 20 ரூபாயும், 12 மணி நேரம் நிறுத்துவதற்கு 40 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு ரூ.80-ம் கட்டணம் நிர்ணயித்து ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கின்றனர்.
பெயரிலும், கட்டணத்திலும் மாற்றம் இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ரயில்வே நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கூரை இல்லாததால் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் சிக்கி வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன.
"பார்க்கிங்கிற்குள் செல்லவும், வெளியே வரவும் சரியான வழி இல்லை. “மேலும், டிராப் மற்றும் பிக்-அப் நோக்கங்களுக்காக ரயில்வே ஸ்டேஷனுக்கு வருபவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை நிறுத்த எந்த ஏற்பாடும் இல்லை. அப்படியே ரயில் நிலைய வாசல் அல்லது சாலைகளில் நிறுத்திச்சென்றால் அபராதமும், வாகனத்தில் காற்றை பிடுங்கி விடும் அவலமும் ரயில்வே போலீஸாரால் அன்றாடம் நிகழ்கிறது. இதனால் பயணிகளை ஏற்றிவிட வரும் உறவினர்கள் தங்கள் வாகனங்களை லாட்டில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் வெறும் 30 நிமிடங்களுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிலை வேதனையளிக்கின்றது.
திருச்சி ரயில்வே ஜங்சனுக்கு தினமும் சுமார் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் கல்வி, வேலை, தொழில் என பல்வேறு பணிகளுக்காக திருச்சி மாவட்டத்திலிருந்து அன்றாடம் லால்குடி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மணப்பாறை, திண்டுக்கல், தஞ்சாவூர் பகுதிகளில் சென்று பணியாற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இவர்களில் 8 ஆயிரம் ரயில் பயணிகள் என்னைப்போல் மாதாந்திர பாஸ் மூலம் திருச்சியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு பயணித்து வருகின்றனர்.
இவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தினமும் தங்களது இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களை ரயில்வே பார்க்கிங்கில் விட்டுச்செல்கின்றனர்.
இந்த வாகனங்கள் யாவும் நிறுத்த வாகன பார்க்கிங் பகுதியில் போதிய இடம் இருந்தும் அந்த இடங்கள் வெட்ட வெளியாக இருப்பதால், வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு செல்லும் நிலை நீடிக்கின்றது. தற்போது கோடை காலம் என்பதால் கொளுத்தும் வெயிலில் நிற்கும் வாகனங்கள் கடும் வெப்பத்தால் நிறம் மாறும் நிலையில் வாகனங்கள் வீணாகின்றன.
இப்படி வீணாகும் வாகனங்களை காக்க ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிழல் வலை கூடாரம், அல்லது மேற்கூரை அமைத்து ரயில் பயணிகளின் வாகனங்களை காக்க முன்வர வேண்டும்.
ஆண்டுக்கு பலகோடி ரூபாய் டெண்டர் மூலம் வருமானம் பார்க்கும் ரயில்வே நிர்வாகமும், ஓப்பந்தக்காரர்களும் இந்த நிலையை கண்டுகொள்வதேயில்லை. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வசூல் செய்து விட்டு சேவையில் ரயில் பயணிகளின் நிலையை கண்டுகொள்வதில்லை. கட்டணத்தை வாங்கும் ஒப்பந்ததாரர்கள் வாகனத்தின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பில்லை என்ற வாசகத்தையும் ஆங்காங்கே தொங்க விட்டிருப்பது சோதனையிலும் வேதனை.
ரயில் சேவையிலும், ரயில் நிலையங்களிலும் பல்வேறு நவீனமயமாதலை கொண்டு வந்ததாக மார்தட்டும் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் வாகன பார்க்கிங் விசயத்தில் கோட்டை விட்டு விட்டு இப்படி மார்த்தட்டுவதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“