தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சேலம் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் திருச்சி அருகே காவிரி ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களோடு உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை காவிரி கரையில் நின்றவாறு கைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறுவை 3.50 லட்சம் ஏக்கரில் பயிர் கருகத் தொடங்கியுள்ளது. சம்பா 15 லட்சம் ஏக்கரில் துவங்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இதுவரையிலும் சம்பா சாகுபடி மேற்கொள்வது குறித்து தெளிவுபடுத்தவில்லை. அரசினுடைய நடவடிக்கை விவசாயிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சி மாநிலம் என அறிவித்து நிவாரணம் வழங்கப் போகிறதா? இல்லை சம்பா சாகுபடி துவங்குவதற்கு ஆலோசனை கூற உள்ளதா? அதற்கான உதவிகள் செய்ய உள்ளதா? எதுவும் தெரிவிக்காமல் வாய் மூடி மௌனியாக முதலமைச்சர் வலம் வருவது வேதனை அளிக்கிறது.
உற்பத்தி மிகை என்றால் தன்னை பாராட்டிக் கொள்வதும் உற்பத்தி முடங்கும் நிலையில் மௌனம் காப்பதும் முதலமைச்சருக்கு அழகல்ல. குறிப்பாக திருச்சியில் அய்யாக்கண்ணு தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார். இன்று நடைபெறுகிற போராட்டம் கூட உயிரை பணையம் வைத்து ஆழமான பகுதிக்கு சென்று காவிரி ஆற்றின் நடுவிலே 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/bajXORBHlOKNSb2HFEHL.jpeg)
78 வயதை கடந்து நிலையில் அவரது போராட்டத்திற்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுமேயானால் மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கிறேன். உடன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். ஏற்கனவே போராடியபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற வருத்தத்தில் தான் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முன்னுர வேண்டும். அய்யாக்கண்ணு நடத்துகிற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முழு ஆதரவளிக்கிறது. விரைந்து அனைவரும் ஒன்றிணைந்து போராட்ட களத்தை சந்திப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அது குறித்தும் உரிய ஆலோசனைகளை விரைவில் மேற்கொள்வோம் என்றார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எல்.பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஈடுபடுகிறார்கள். 43-வது நாளில் திருச்சி அருகே முத்தரசநல்லூர் காவிரி ஆற்றில் இறங்கி மாலைகட்ட பயன்படுத்தப்படும் மாசிபச்சை பயிரினை காவிரி ஆற்றின் மணல் பகுதியில் நட்டு வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“