சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது . இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமல்லாத தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் ஆடி மாதத்தை பொறுத்தவரை ஆடி வெள்ளி ஆடி பதினெட்டு போன்ற முக்கிய திரு நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்று இரவு சமயபுரம் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவு வாயில் இடதுபுற சிமெண்ட் தூண் கட்டையில் நேற்று நள்ளிரவு லாரி மோதியுள்ளது. இதனால் தூணில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதனால் சமயபுரம் கோவிலின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இன்று ஆடி 18 முன்னிட்டு சமயபுரம் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இந்த அசம்பாவிதத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களை பாதுகாப்பு கருதி வளைவை முற்றிலும் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. பக்தர்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“