திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் உமா ராமசாமி (வயது 75). இவர் வரும் ஜூலை 5ம் தேதி திருச்சியில் இருந்து பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று அருகில் உள்ள ஆன்லைன் சென்டருக்கு சென்றுள்ளார்.
அப்போது ஆன்லைனில் அவரது பயணத்திற்காக ரயில்களில் விபரம் தேடிய போது வண்டி எண்: 22498, SGNR HUMSAFAR என்ற ரயிலில் 3 வகுப்பு ஏசி பெட்டியில் இருக்கைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து உமாராமசாமி டிக்கெட் முன்பதிவு செய்தார்.
அவருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்டு B9 பெட்டியில், 9ம் நம்பர் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக வரி உட்பட ரூ.875 தொகையை இணையம் வாயிலாக செலுத்தினார். பின்னர், அவரது தொலைபேசி எண்ணில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மூலம் அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட விவரம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து அடுத்து 15 நிமிடத்தில் அவரது முன்பதிவு டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும், பிடித்தம் போக மீதி 650 ரூபாய் உங்களது வங்கி கணக்கில் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த உமா ராமசாமி ரயில்வே விசாரணை எண் 139க்கு தொடர்பு கொண்டு பேசினார்.
நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி உமா ராமசாமியிடம் பேசியபோது தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டின் விவரம், டிக்கெட் கேன்சல் செய்த விபரம் ஆகியவற்றை சரி பார்ப்புக்குப் பிறகு, அவர் புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக உமா ராமசாமி கூறினார்.
பின்னர் உமா ராமசாமி தனது செல்போனில் முன்பதிவு செய்த ரயிலில் இருக்கைகள் குறித்த விவரம் பார்த்தபோது அதில் இருக்கைகள் இருப்பதாக காண்பிக்கிறது. இந்நிலையில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் குறிப்பிட்ட ரயில் இல்லை என கூறுவது ஏற்புடையதாக இல்லை. மேலும், டிக்கெட் முன்பதிவு தானாக ரத்து செய்யப்பட்டதால் தமக்கு 200 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதுடன் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக மூதாட்டி உமா ராமசாமி தெரிவித்தார்.
வயதான காலத்தில் ரயில் நிலையம் சென்று வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாத நிலையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இது போன்ற குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்று ஆன்லைனில் மோசடி நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தினை ஈடு கட்டும் வகையில், தான் செலுத்திய முழு தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென செய்தியாளர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
மூத்த குடிமகள் உமா ராமசாமி ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ததில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு; ரயில் 622498 (பிஎன்ஆர் 4615714220) திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு 3வது ஏசி வகுப்பில் உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை ஐஆர்சிடிசி தனது அனுமதியின்றி ரத்து செய்ததாகக் கூறி திருச்சியில் உள்ள பெண் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, தெற்கு ரயில்வே விசாரணைக்கு பின், பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவர் தனது அண்டை வீட்டாரான தேவராஜ் மூலம் அவரது தனிப்பட்ட ஐடியிலிருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். ஐஆர்சிடிசி இணையதளப் பதிவுகளில் இருந்து தேவராஜ் தனது சொந்த ஐடியைப் பயன்படுத்தி ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் தனது டிக்கெட்டை ரத்து செய்ததாகவும், பணத்தைத் திரும்பப்பெறும் தொகை மாற்றப்படும் நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே, ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் தானாக ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறியது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது என்றும், இந்த உண்மை தகவலை தேவராஜ் தொலைபேசி மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி :க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.