Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. இன்று அரசுத் தரப்பு பதில் அளிக்கும்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv dhinakaran faction 18 mla's disqualification, ttv dhinakaran, aiadmk, advocate abhishek manu singhvi, speaker dhanapal, cm edappadi palaniswami, chennai high court, v.k.sasikala

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. டிடிவி தரப்பு முன்வைத்த வாதங்களுக்கு இன்று அரசுத் தரப்பு பதில் அளிக்கும்.

Advertisment

டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடம் இவர்கள் கொடுத்த கடிதமே அந்த நடவடிக்கைக்கு காரணம்!

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் முடிவைப் பொறுத்தே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஆயுளும் இருக்கும். எனவே தேசிய அளவில் இந்த வழக்கு அதிக கவனம் பெற்றிருக்கிறது.

இந்த வழக்கில் சபாநாயகர் தனபால் தரப்பில், மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடுகிறார். டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 4-ம் தேதி இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அன்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி காலை 11.30 மணிக்கு வாதத்தை தொடங்கி, மதியம் 1.30 மணி வரை விடாமல் ‘பாயின்ட்’களை அடுக்கினார். பிறகு மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் அவரது வாதமே தொடர்ந்தது அவர் தனது வாதத்தில் அன்று சில முக்கியமான ‘பாயின்ட்’களை முவைத்தார்.

குறிப்பாக, ‘சபாநாயகர் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவை முதலில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஊடகங்களுக்கு கொடுத்தது முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது இதே சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.

முதல்வரின் ஊழலுக்கு எதிராக விமர்சனம் செய்வது கட்சி விரோத நடவடிக்கை கிடையாது. மேலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எந்த நடவடிக்கையிலும் 18 எம்.எல்.ஏ.க்களும் ஈடுபடவில்லை. சபாநாயகரின் நடவடிக்கைக்கு நான்கு முறை நாங்கள் ஆட்சேபனை மனு கொடுத்தோம். அவற்றை சட்டப்படி பரிசீலிக்காமல் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கொடுத்த புகார் மனு மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மனுவுடன் கொடுக்கப்பட்ட ஆவணங்களை நாங்கள் கேட்டபிறகும் எங்களுக்கு வழங்கவில்லை. இதுவும் இயற்கை நீதிக்கு எதிரானது. எங்கள் தரப்பு விளக்கத்தை கொடுக்க நாங்கள் கேட்ட அவகாசத்தை சபாநாயகர் வழங்கவில்லை. உரிய அவகாசம் கொடுக்காமல், நடவடிக்கை எடுத்ததும் முறையல்ல.’ என அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

இடையிடையே சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி குறுக்கிட்டு சில கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக, டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் ஆட்சியை கவிழ்க்க இருப்பதாக பேட்டி கொடுத்திருப்பதை முகுல் ரோஹத்கி சுட்டிக்காட்டினார்.

விவாதங்களை தொடர்ந்து இந்த வழக்கை அக்டோபர் 9-ம் தேதிக்கு நீதிபதி ரவிசந்திரபாபு தள்ளி வைத்தார். 9-ம் தேதி இந்த வழக்கில் மேலும் எந்தத் தரப்பும் வாய்தா கேட்கக்கூடாது என்கிற கருத்தையும் நீதிபதி வெளியிட்டார். எனவே இன்று (9-ம் தேதி) இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடக்கிறது.

இதையொட்டி இரு தரப்பு சார்பிலும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுகிறார்கள். இதனால் அனைவரின் எதிர்பார்ப்பும் நீதிமன்றத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணையை முடித்து இன்றே தீர்ப்பு கூறுமா? அல்லது, விசாரணையை முடித்துக்கொண்டு, தீர்ப்பை மட்டும் தள்ளிவைக்குமா? என்பது தெரியவில்லை.

இந்த வழக்கையொட்டி, ‘சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைமுறைகளை தொடங்கக்கூடாது’ என ஏற்கனவே நீதிபதி துரைசாமி பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குடன், சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஆகியனவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால் திரளான வழக்கறிஞர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Chennai High Court V K Sasikala Ttv Dhinakaran Advocate Abhishek Manu Singhvi Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment