Advertisment

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm edappadi palaniswami, aiadmk, speaker dhanapal, TN assembly, TN assembly floor test, ttv.dhinakaran faction

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisment

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை இன்று (செப்.18) அதிரடியாக சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியல், பரபரப்பாக கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக டிடிவி அணியின் வெற்றிவேல் புகார் தெரிவித்தார்.

அந்த புகாரை பரிசீலித்த நீதிமன்றம், ‘அப்படி தகுதி நீக்கம் செய்யும் திட்டம் அரசாங்கத்திடம் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ‘18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கமாட்டோம் என உத்தரவாதம் தர முடியாது’ என கூறினார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில்தான் இன்று (செப். 18) அதிரடியாக 18 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் தனபால் எடுத்திருக்கிறார். இதன் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது.

இப்போதைய சூழலில் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், மேற்படி 18 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க முடியாது. தமிழகத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் 234. ஜெயலலிதா ஜெயித்த ஆர்.கே.நகர் காலியாக இருப்பதால், 233 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 215 ஆகிறது.

இந்த எண்ணிக்கை அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், எடப்பாடி அரசு வெற்றிபெற 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேவை. வருகிற 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, பெரும்பான்மையை நிரூபிப்பதே எடப்பாடி அரசின் திட்டம் என்கிறார்கள்.

இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி.தினகரன் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது. அதில் வரப்போகும் உத்தரவு, இந்த விவகாரத்தில் முக்கிய தாக்கத்தை உருவாக்கும். இந்த தகுதி நீக்கத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா? அல்லது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடை மேலும் நீட்டிக்கப்படுமா? என சட்ட நிபுணர்கள் மத்தியில் விவாதம் நடக்கிறது.

ஒருவேளை சபாநாயகர் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடாதபட்சத்தில், எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்கும். அதன்பிறகு மேற்படி 18 எம்.எல்.ஏ.க்களும் நீதிமன்றத்தில் முறையிட்டு பதவியைக் காப்பாற்றி வந்தாலும், அடுத்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த அவகாசத்தில் டிடிவி அணி எம்.எல்.ஏ.க்களில் சிலரை எடப்பாடி அணி தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில், எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் எதிர்கொள்ளவிருந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அல்லது அந்த நெருக்கடியை தள்ளிப்போட சபாநாயகரின் இந்த நடவடிக்கை உதவியிருக்கிறது.

 

 

Ttv Dhinakaran Tn Assembly Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment