Advertisment

தமிழக சட்டமன்ற உரிமைக் குழுவில் 3 பேர் டிடிவி.தினகரன் அணி : ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் தப்புவார்களா?

தமிழக சட்டமன்ற உரிமைக்குழுவில் 3 பேர் டிடிவி.தினகரன் அணியை சேர்ந்தவர்கள்! இதனால் ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் தப்புவார்களா?

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Assembly Session

TN Assembly Session

தமிழக சட்டமன்ற உரிமைக்குழுவில் 3பேர் டிடிவி.தினகரன் அணியை சேர்ந்தவர்கள்! இதனால் ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் தப்புவார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisment

தமிழக அரசியல் உச்சகட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அதிமுக.வில் இருந்து சசிகலாவை நீக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்த அணி முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இதை அரங்கேற்றத் தயாரானால், அதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க டிடிவி.தினகரன் அணி மும்முரமாக களம் இறங்கியிருக்கிறது.

இதற்காகவே டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என ஆளுனரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய எதிர்கட்சிகள், ‘சட்டமன்றத்தை உடனே கூட்டி, மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்’ என ஆளுனருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

ttv.dhinakaran faction, tamilnadu assembly privileges committee, m.k.stalin மு.க.ஸ்டாலின்

ஆக, சசிகலா நீக்கப்படுவாரா? அல்லது ஆட்சி நீக்கப்படுமா? என்கிற கேள்வியை ஒட்டி அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஆட்சியை தக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக காய்களை நகர்த்தி வருகிறார். கோட்டையில் சபாநாயகர் தனபாலை அவர் சந்தித்து பேசிய சில நிமிடங்களில், டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கோரிக்கை வைத்திருக்கிறார். அதை ஏற்று சபாநாயகரும் மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

இதனால் டிடிவி. அணிக்கு தாவும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறையும் என எடப்பாடி தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் தொடர்ந்து அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் என டிடிவி அணி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இவர்களில் எத்தனை பேரை கட்சி தாவல் தடை சட்டத்தில் சபாநாயகர் மூலமாக நீக்கப் போகிறார்கள்? என்பது தெரியவில்லை.

இன்னொரு பக்கம், திமுக.வுக்கு ‘செக்’ வைக்கும் விதமாக கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டமன்றத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் வந்ததாக கூறி ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மீது உரிமைக்குழு விசாரிக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் குழுக்கள் கூடும் அறையில் ஆகஸ்ட் 28-ம் தேதி (திங்கட்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் குழுவில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே, ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் தப்புவார்களா? என்பது தெரியும்.

தமிழக சட்டமன்ற உரிமைக்குழுவில் மொத்தம் 17 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். சட்டமன்ற துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன், இந்தக் குழுவின் தலைவராக இருக்கிறார். முதல்வர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும், அவை முன்னவர் என்ற முறையில் செங்கோட்டையனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களை தவிர, ஆளும்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான மருதமுத்து, பரமேஸ்வரன், தங்கத்துரை, எஸ்.எஸ்.சரவணன், எம்.கீதா, டி.ஏ.ஏழுமலை, ராம ஜெயலிங்கம், ஜக்கையன் ஆகிய 7 எம்.எல்.ஏ.க்கள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.சுந்தர், கே.ஆர்.பெரியகருப்பன், மதிவாணன், எஸ்.ரகுபதி ஆகிய 6 பேர் இதில் உறுப்பினர்கள். காங்கிரஸ் சார்பில் விஜயதரணி உறுப்பினராக இருக்கிறார். ஆக, இதில் ஆளும்கட்சியின் பலம் 10 ஆகவும், எதிர்கட்சிகளின் பலம் 7 ஆகவும் இருக்கிறது.

இதில் இப்போது பிரச்னையே, ஆளும்கட்சியின் 10 உறுப்பினர்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், நிலக்கோட்டை தங்கதுரை, பூந்தமல்லி ஏழுமலை ஆகியோர் டிடிவி.தினகரன் அணியில் இருக்கிறார்கள். சட்டமன்ற உரிமைக்குழு கூட்டத்தில் இவர்கள் பங்கேற்று எதிராக வாக்களித்தால், அதுவும் கட்சி தாவல் தடை சட்டத்திற்கு உட்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல், பாண்டிச்சேரியிலேயே தங்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

அந்தச் சூழலில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தலா 7 எம்.எல்.ஏ.க்கள் என சமபலம் இருக்கிறது. எனவே ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு பரிந்துரை செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இதுபோல குழுவின் முடிவில் சமமான நிலை ஏற்பட்டால், சபாநாயகர் தனது ஆய்வின் மூலமாக முடிவை அறிவிக்கலாம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு அதிகம்.

இதற்கிடையே திருவாரூரில் ஆகஸ்ட் 27-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டாலின், ‘சட்டமன்ற உரிமைக் குழுவில் பங்கேற்க எனக்கு அழைப்பு இல்லை’ என்றார். இது குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில், ‘குட்காவை சட்டமன்றத்திற்கு எடுத்து வந்த புகாரில் ஸ்டாலின் பெயரும் இருக்கிறது. எனவே அவர் உரிமைக்குழுவின் உறுப்பினராக இருந்தாலும்கூட, இந்த விசாரணையில் பங்கேற்க முடியாது. இதனால் உரிமைக்குழுவிலேயே 7-6 என்ற எண்ணிக்கையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை உறுதி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்’

ஆக, திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும், டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் சஸ்பெண்ட் அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர்களால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியாது. எனவே சட்டமன்றத்தின் மொத்த பலம் 200-ஐ விட குறையும். 100 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே எடப்பாடி பழனிசாமி அரசு தப்பிவிடும். இந்த திசையை நோக்கியே எடப்பாடி அரசு காய்களை நகர்த்துகிறது. சட்டமன்ற உரிமைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் சபாநாயகரின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்படி இருக்கப்போகிறது? என்பதையே அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

Dmk Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment