Advertisment

குண்டர் சட்டத்தில் கைதாகிறாரா நாஞ்சில் சம்பத்? காவல்துறை திட்டம் என்ன?

இதுவரை போடப்பட்ட வழக்குகள் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகள்தான் என்றாலும், அடுத்தடுத்து புகார்கள் வருவதால் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
குண்டர் சட்டத்தில் கைதாகிறாரா நாஞ்சில் சம்பத்? காவல்துறை திட்டம் என்ன?

மதிமுகவில் முன்னணி பேச்சாளராக திகழ்ந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Advertisment

பின்னர் அதிமுகவின் கொள்கைபரப்பு துணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், அதிமுக தலைமை கழக நட்சத்திர பேச்சாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்தப் பதவிகளோடு இன்னோவா காரையும் பரிசாக பெற்றார்.

2016 சட்டசபை தேர்தல் சமயத்தின் போது, தொலைக்காட்சி ஒன்றில் அதிமுக கூட்டணி குறித்து மேலிட கருத்துக்கு மாறாக பேசியதற்காக அவரது கட்சிப்பதவியை ஜெயலலிதா பறித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இன்னோவா காரை திருப்பிக்கொடுத்த நாஞ்சில் சம்பத்தை மீண்டும் அழைத்து இன்னோவா காரை அளித்து கட்சிப்பணி ஆற்றுமாறு சசிகலா கேட்டுக்கொண்டார்.

அதுமுதல் சசிகலா தரப்பின் தீவிர பிரச்சார பீரங்கியாக மாறிய நாஞ்சில் சம்பத், அதிமுக ஓபிஎஸ் அணி , எடப்பாடி அணி என இரண்டாக பிளவு பட்டபோது ஓபிஎஸ் அணியை கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் இரு அணிகளும் இணைந்தது முதல் பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தவறாக பேசியதாக அக்கட்சியினர் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது மேலும் நான்கு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாஞ்சில் சம்பத் மீதான புகார்கள் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, தமிழிசை சௌந்திரராஜன் குறித்து நாஞ்சில் சம்பத் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நாஞ்சில் சம்பத் உணவு அருந்திக் கொண்டிருப்பதை அறிந்து, அந்த ஹோட்டலை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதை சற்றும் எதிர்பார்க்காத நாஞ்சில் சம்பத் உடனே தனது காரில் ஏறி செல்ல முயன்றார். அப்போது, பாஜவினர் சிலர் அவரது கார் டயரில் காற்றை பிடுங்கிவிட்டனர். நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் தலையிட்டு அவரை மீட்டனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட 4 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாஞ்சில் சம்பத் மீது பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுவது, பொது வெளியில் அவதூறாக பேசுவது, அவதூறாக பேட்டி அளிப்பது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இன்றும் அவர் மீது சைதாப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி காவல் நிலையங்களில் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாஞ்சில் சம்பத் மீது பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை போடப்பட்ட வழக்குகள் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகள்தான் என்றாலும், அடுத்தடுத்து புகார்கள் வருவதால் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நாஞ்சில் சம்பத் மீதான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனக்கு அதிக அளவில் மிரட்டல்கள் வருவதால் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் மனு அளித்துள்ளார்.

Bjp Ops Eps Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment