நீர் அடித்து நீர் விலகாது: கட்டித் தழுவி இணைந்த டிடிவி தினகரன் - திவாகரன்!

தினகரனும் திவாகரனும் துக்க வீட்டிற்கு வந்த போது கட்டித் தழுவி பேசிக் கொண்டது அதிமுக வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மனைவியும், டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தான லட்சுமி நேற்று காலமானார். இதையடுத்து, சந்தான லட்சுமியின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக தஞ்சையில் சசிகலா உறவுகள் குவிந்தனர். எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன், ஜக்கையன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர்.

இவர்களுடன் அமர்ந்திருந்த தினகரனோடு, திவாகரன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். முன்னதாக, ‘குடும்பத்திற்குள் அடித்துக் கொண்டால், கட்சியை மீட்க முடியாது’ என சிறையில் சசிகலா வேதனை தெரிவித்திருந்தார். இதையொட்டி, துக்க வீட்டிற்கு வந்த தினகரனும் திவாகரனும் கட்டித் தழுவி பேசிக் கொண்டது அதிமுக வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “துக்க நிகழ்ச்சிக்கு யாரு வேண்டுமானலும் வரலாம், வராமலும் போகலாம். இதை அரசியல் ஆக்க வேண்டாம். யாருக்கும் எந்தவிதமான அரசியல் நெருக்கடி கிடையாது. பதவி என்பது வேறு ஆட்சி என்பது வேறு. அதிமுகவிற்கு தற்போது சோதனை மிகுந்த காலகட்டம். சக்கரவீயுகத்தில் மாட்டி கொண்ட அபிமன்யூ போல தற்போது அதிமுகவும் சிக்கி தவிக்கிறது. அதை எப்படியும் மீட்டெடுப்போம்.

எனக்கும் தினகரனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. டிடிவி எனது மூத்த சகோதரியின் மகன். நீர் அடித்து நீர் விலகாது. எங்கள் இருவருக்கும் பிரச்னையே இல்லாத போது நடராஜன் எப்படி பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்?. எடப்பாடி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தினகரன், “தூக்கவீட்டில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஒருசிலர் நேரில் வருகிறார்கள், ஒருசிலர் போன் மூலம் துக்கம் தெரிவித்தார்கள். அமைச்சர்கள் வராததை அரசியலாக்க வேண்டாம். அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

முன்னதாக, இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ரத்த சம்பந்தமுள்ள உறவாக இல்லாததால், பரோல் வழங்க முடியாது என சிறைத்துறை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close