தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்? மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு

கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த டிடிவி தினகரன், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 4 மாதங்களுக்கு பின்னர் செல்ல இருக்கிறார்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆக., 5-ல்  வர மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக பிரிந்தது. ஒ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ததையடுத்து, முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு கண்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைவாசம் சென்றார்.

Sasikala

இதனையடுத்து, கட்சியை வழிநடத்த துணைப்பொதுச்செயலாளராக வந்தார் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் மறைவினால் காலியான, அவரது ஆர்.கே.நகர்  தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, இரட்டை இலை சின்னத்திற்கு டிடிவி தினகரன் தரப்பும், ஓ பன்னீர் தரப்பும் உரிமை கோரின. இதனால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

இதனால், இரு அணிகளும் வெவ்வேறு சின்னத்தில் தேர்தலில் களம் கண்டன. அந்த சமயத்தில், ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா புகார் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்காக, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார் டிடிவி தினகரன். ஆனாலும், இரு அணிகளும் இணைவதாக தெரியவில்லை. பின்னர் ஜாமினில் வெளிவந்த டிடிவி தினகரன், சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தார். இதன் பின்னர் டிடிவி தினகரன் அறிவித்தது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகவே கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதகா அறிவித்திருந்தேன். ஆனாலும், இரு அணிகளும் இணையவில்லை என்று கூறினார். இரு அணிகளும் இணைவற்கு 60 நாட்கள் கெடு விதித்த டிடிவி தினகரன், இரு அணிகள் இணையாததையடுத்து மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று அறிவித்தார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் அதிமுக எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளாரக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு பாஜக ஆதரவு கோரியது. அப்போது, எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு, ஓ. பன்னீர் செல்வம் ஒரு முடிவு மற்றும் கடைசியாக டிடிவி தினகரன் ஒரு முடிவு என ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இரண்டாக பிளவுபட்டிருந்த அதிமுக, டிடிவி தினகரனின் அறிவிப்பு மூலம் மூன்றாக உடைந்தது உறுதியானது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அவரை சென்று சந்தித்தனர். எனிறும், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை, நட்பு ரீதியான சந்திப்பு என்றே டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறும் போது, துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையிலும், கட்சியின் தொண்டனாகவும் என்னுடைய முதல் பணி கட்சியை பலப்படுத்துவதே. அதனை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பின்னர் தொடர்வேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பேன்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எங்கள் குடும்பம் தடையாக இருப்பதாக சில நண்பர்கள் தெரிவித்தனர். அதனால் தான் கொஞ்ச நாட்கள் நான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறியிருந்தேன். தற்போது, கட்சியை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்துவதும் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதுமே எனது நோக்கம் என்று கூறினார்.

அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஆகியவை இணைவது தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், முன்னதாக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பபட்டிருந்த குழுக்கள் கலைக்கப்பட்டன. சசிகலா குடும்பத்தை ஒதுக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் அணியின் முதன்மை நோக்கமாக இருந்து வரும் நிலையில், மீண்டும் பன்னீர் செல்வம் அணி இணையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

O Panneerselvam

முன்னதாக டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன்பின்னர், டிடிவி தினகரன் அதிமுக அலுவலகத்திற்கு 4 மாதங்களுக்கும் மேலாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியின் கட்டுப்பாட்டிலேயே அதிமுக தலைமை அலுவலகம் உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியைப் பொறுத்தவரையில், டிடிவி திகனரன் தலைமையில் செயல்பட வேண்டும் என்றும், ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறட்டும் என்பதே டிடிவி தினகரனின் ஆதரவாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

×Close
×Close