உதயமானது டி.டி.வி. பேரவை : அதிர்ச்சியில் எடப்பாடி

‘ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இதெல்லாம் நடக்குமா?’ என கேள்வி எழுப்பும்படியே அ.தி.மு.க.வின் அடுத்தடுத்த ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது.

‘ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இதெல்லாம் நடக்குமா?’ என கேள்வி எழுப்பும்படியே அ.தி.மு.க.வின் அடுத்தடுத்த ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பெயரில் மன்றம் இருக்கிறது; மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் பேரவை இருக்கிறது. அதைத் தாண்டி, முதல்முறையாக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் பெயரிலும் பேரவையை தொடங்கியிருக்கிறார்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வேலப்பன்கோவில் மலையடிவாரப் பகுதியில் அண்மையில் இந்தப் பேரவையின் தொடக்கக் கூட்டம் நடந்தது. ரெங்கராஜ் என்பவர் இந்தப் பேரவையின் நிறுவனத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதர மாநில நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பேரவையின் நோக்கம் குறித்து ரெங்கராஜ் கூறுகையில், “தேனி எம்.பி.யாக இருந்து டி.டி.வி.தினகரன் செய்த சாதனைகளை பிரசாரம் செய்யவிருக்கிறோம். அதேபோல ஓ.பி.எஸ். இந்த இயக்கத்திற்கு செய்த துரோகங்களை மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து அம்பலப்படுத்துவோம்.’ என தெரிவித்தார்.

அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து டி.டி.வி.யை ஒதுக்கி வைத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனாலும் திகார் சிறையில் இருந்து டி.டி.வி. திரும்பியபிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் அவரை சந்தித்தபடியே இருந்தார்கள். அதைக்கூட எடப்பாடி தரப்பு கண்டுகொள்ளவில்லை.

இப்போது அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அடுத்தபடியாக தன்னை முன்னிறுத்தும் வகையில் டி.டி.வி. தரப்பு தனியாக பேரவை தொடங்கியிருப்பது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது கட்சிக்குள் குழப்பத்தை அதிகரிக்கும் காரியமாக அவர்கள் பார்க்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அ.தி.மு.க. தொலைக்காட்சியில் இந்தச் செய்தி பிரதான முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே இது டி.டி.வி.க்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என அம்மா அணி வட்டாரத்திலேயே ஆணித்தரமாக சொல்கிறார்கள்.

இதற்கிடையே இந்தக் காட்சி அடங்கிய வீடியோ தொகுப்பை ஓ.பி.எஸ். தரப்பு கைப்பற்றியிருக்கிறது. அவர்கள் அதனை அமைச்சர்கள் சிலருக்கே அனுப்பி, ‘பார்த்தீர்களா? டி.டி.வி.யை விட்டால், அ.தி.மு.க. பெயரையே டி.டி.வி. கழகம்’ என மாற்றிவிடுவார். இப்போதாவது நிலைமையை புரிந்துகொண்டு ஓ.பி.எஸ். அணிக்கு வாருங்கள்!’ என ‘கேன்வாஸ்’ செய்கிறார்கள்.

×Close
×Close